
PMK vs VCK Fight: ”அடிதடி , களேபரம்” ராமதாஸ் வீட்டுமுன் நடனம்! விசிக - பாமக மோதல்!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மயானக் கொள்ளை ஊர்வலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பாமகவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இல்லம் முன்பாக விசிக கொடி வைத்து நடனமாடியதால் மோதல் ஏற்ப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் செஞ்சி சாலையில் உள்ள அங்காளம்மன் கோயிலில் இருந்து மயானாக்கொள்ளை நிகழ்வுக்காக பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது காமாட்சி அம்மன் கோயில் தெருவில் உள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இல்லம் முன்பாக ஊர்வலம் சென்றபோது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலர் வேலில் கட்சி கொடியை கட்டி நடனமாடியுள்ளனர்.
இதற்கு அங்கிருந்த பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதமாக ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது. தொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் இரு தரப்பினரையும் தடுத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மோதல் காரணமாக அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.