Medical Waste : டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!
கேரளாவில் இருந்து நாள்தோறும் 200 டன்னுக்கும் மேற்பட்ட இறைச்சி, கேன்சர் மருத்துவமனை கழிவுகளை கொண்டு வந்து தமிழ்நாட்டில் கொட்டுவதாக பகீர் புகார் எழுந்துள்ளது. அரசின் கவனத்துக்கு இதை கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்காததாக மக்கள் புலம்பி வருகின்றனர்.
கடந்த பல ஆண்டுகளாக கன்னியாகுமாரியில் கேரளாவில் இருந்து டன் கணக்கில் மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதாக மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த புகார் நடவடிக்கைகளுக்கு எந்த நடவடிக்கையும் முறையாக எடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் கேரளாவின் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையம் (ஆர்சிசி) மற்றும் கிரெடன்ஸ் தனியார் மருத்துவமனை ஆகியவற்றில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகளை திருநெல்வேலி மாவட்டம் கொடகநல்லூர் மற்றும் பழவூர் கிராமங்களில் பல இடங்களில் கொட்டப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதீத ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடிய பயன்படுத்தப்பட்ட மருத்துவ பொருட்களை அங்குள்ள நீர் நிலைகள் மற்றும் பட்டா நிலங்களிலும் கொட்டி விட்டு செல்வதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பல மாதங்களாக இந்த பகுதிகளில் இந்த கொடூர செயல் நடைபெறுவதாகவும், அருகில் இருக்கும் காகித ஆலைக்கு சுமைகளை ஏற்றிச்செல்வதாகச் சொல்லி லாரிகளில் இருந்து டன் கணக்கில் மருத்து கழிவுகள் கொட்டப்படுவதாகவும் சொல்கின்றனர். இதனால் மக்கள் பல்வேறு நோய் பாதிப்புக்கு உள்ளாகும் சூழலும் உருவாகியுள்ளது.
அருகில் உள்ள சுத்தமல்லி காவல்துறை, தமிழ் நாடு முதலமைச்சரின் சிறப்புப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளின் கவனத்துக்கு இந்தப் பிரச்னை கொண்டு செல்லப்பட்டுள்ளது . ஒரு மாதத்திற்கு முன்பு புகார் அளிக்கப்பட்டது , ஆனால் இன்று வரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை . பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த குழுவும் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடாததால், காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக ”அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் .
சட்டவிரோதமாக கொட்டப்படும் கழிவுகளை கேரளாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும், மேலும் தமிழகத்திற்கு அபாயகரமான பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சூழலில் இதுகுறித்து ஆய்வு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். புகர்களுக்கு விரைவில் எப்ஐஆர் பதிவு செய்யப்படும் என திருநெல்வேலி காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார் . தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, உடனடியாக, கேரள மாநிலத்தின் குப்பைக் கிடங்காக தமிழக எல்லையோர மாவட்டங்கள் மாற்றப்படுவதைத் திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
இனியும் இதே போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால், வரும் 2025 ஜனவரி முதல் வாரத்தில், பொதுமக்களைத் திரட்டி, இந்த உயிரியல் மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகளை லாரிகளில் ஏற்றிச் சென்று, கேரளாவில் கொண்டு கொட்டுவோம். முதல் லாரியில் நானும் செல்வேன் என்பதைத் திமுக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.”என்று கூறியுள்ளார்.