பிச்சை போட்டால் சிறையா? பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு! எச்சரிக்கும் கலெக்டர்
இந்தூரில் பிச்சை போடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் வார்னிங் கொடுத்துள்ளது இந்தியா முழுவதும் கவனம் பெற்றுள்ளது.
தூய்மையான நகரங்களின் பட்டியலில் தொடர்ந்து 7ஆவது முறையாக முதலிடம் பெற்ற நகரமாக இருக்கிறது மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர். அடுத்தக்கட்டமாக பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக இந்தூரை மாற்ற முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல், பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் மீது FIR பதிவு செய்யும் முடிவை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் இந்தூர் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங் பேசுகையில், "இந்தூரில் பிச்சை எடுப்பதை தடை செய்து நிர்வாகம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. பிச்சை எடுப்பதற்கு எதிரான எங்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் இந்த மாத இறுதி வரை தொடரும்.
வரும் ஜனவரி 1 முதல் யாராவது பிச்சை போடுவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும். இந்தூரில் வசிப்பவர்கள் அனைவருக்கும் பிச்சை கொடுப்பதன் மூலம் பாவத்தில் பங்குதாரர்களாக மாற வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திட்ட அதிகாரி தினேஷ் மிஸ்ரா கூறுகையில், "பிச்சை எடுப்பதற்கு எதிரான பிரச்சாரத்தின் போது, இந்தூர் நிர்வாகத்திற்கு சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அறிக்கைகளைத் தயாரிக்கும்போது, சில பிச்சைக்காரர்களுக்கு ஒரு வீடு இருப்பதையும், சிலரின் பிள்ளைகள் வங்கியில் வேலை செய்வதையும் கண்டுபிடித்தோம்.
ஒருமுறை பிச்சைக்காரரிடம் ரூ 29,000 கிடைத்தது. மற்றொரு பிச்சைக்காரர் கடன் வாங்கி வட்டிக்கு பணம் வாங்குவது தெரிய வந்தது. இங்கு பிச்சை எடுக்க ராஜஸ்தானில் இருந்து ஒரு கும்பல் குழந்தைகளுடன் வந்தது. அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து மீட்கப்பட்டனர்" என்றார்.