NEET-ஐ ரத்து பண்ணுங்க தண்டவாளத்தில் படுத்த மாணவர்கள் அடித்து கைது செய்த போலீஸார்!
நீட் தேர்வுக்கெதிராக டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருப்பரங்குன்றத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினரை போலீஸார் கைதுசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும், நீட் தேர்வால் தற்கொலைசெய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத்தொகை வழங்க வலியுறுத்தியும், கல்வி அமைப்பை சீர்செய்ய வலியுறுத்தியும் டெல்லியில் டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சியினர் மற்றும் இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் கடந்த 25 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட இளைஞர்கள் மீது ஜூலை 20-ம் தேதி டெல்லி போலீஸார் கடுமையான தாக்குதலை நடத்தினர்.
போலீஸின் இத்தகைய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தினர் மற்றும் இந்தியா ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட சில அமைப்புகள் சேர்ந்து திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம் காவல் நிலையம் முன்பு தொடங்கிய போராட்டத்தால், தெற்கு காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் போலீஸார் ரயில் நிலையத்தில் குவிக்கப்பட்டு, தண்டவாளத்திற்கு செல்லும் பாதைககள் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளன. மேலும் ரயில் நிலையம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும், போராட்டக்காரர்கள் தடுப்புகளை தகர்த்துவிட்டு ரயில்வே தண்டவாளம் நோக்கி சென்றனர். அப்போது போலீஸார் ரயில் நிலையம் அருகில் வைத்து அவர்களைத் தடுத்தனர்.
பின்னர் பாலக்காட்டில் இருந்து மதுரை வழியாக திருச்செந்தூர் செல்லும் ரயிலில் ஏறி வந்த மாணவர்கள் திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் இறங்கி, ரயில் முன்பு தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்படவே அங்கிருந்த போலீஸார் உடனடியாக, தண்டவாளத்தில் படுத்திருந்தவர்களை குண்டு கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். இதில் மாணவர்கள் சட்டை கிழிந்து போலீஸாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சுமார் பத்து நிமிடப் போராட்டத்திற்குப் பின்னர், திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் இருந்து பாலக்காடு திருச்செந்தூர் ரயில் புறப்பட்டது.
தொடர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 24 மாணவர்கள் 12 மாணவிகள் 8 மாதர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் திருப்பரங்குன்றம் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட 65க்கும் மேற்பட்டோர் கைது.
போராட்டக்காரர்களை போலீஸார் கைதுசெய்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.