Periyar river flood | பெரியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு.. கயிறு கட்டி ஆற்றை கடக்கும் மலைக்கிராம மக்கள்
கொடைக்கானல் பேத்துப்பாறை கிராமத்தில் உள்ள பெரியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு, கயிறு கட்டி ஆற்றை கடக்கும் மலைக்கிராமமக்கள். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், பல்வேறு ஆறுகள் மற்றும் நீரோடைகளிலும் நீர் ஆர்ப்பரித்துக்செல்கிறது , இந்நிலையில் இன்று பிற்பகல் பெய்த கன மழையினால் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பேத்துப்பாறை ஆறடி பீமன் கோவில் அருகே உள்ள பெரியாற்று வயல்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டது, இந்தப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர், இவர்களின் அன்றாட தேவையினை பூர்த்தி செய்யவும், விவசாய பணிகளை மேற்கொள்வதற்கும் பேத்துப்பாறை வயல்பகுதி அருகே உள்ள பெரியாற்றுப்பகுதியை கடந்து செல்ல வேண்டிய சூழலே தற்போது வரையும் நிலவுகிறது , இந்த பெரியாற்றுப்பகுதியினை கடந்து செல்வதற்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த மரப்பாலம் கஜாபுயலால் சேதமடைந்து தற்போது வரை சீரமைக்கப்படவில்லை, இந்நிலையில் இந்தப்பகுதியில் உள்ள தோட்டங்களில் விவசாய பணிக்கு இன்று காலையில் சென்ற 20க்கும் மேற்பட்ட மலைகிராம விவசாயிகள் மாலை வேளையில் விவசாய பணிகளை முடித்து திரும்பும் பொழுது திடீரென ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஆற்றைக்கடக்க முடியாமல் பெரும் அவதியடைந்தனர், அதனை தொடர்ந்து ஆற்றின் இருபுறமும் கயிற்றைக்கட்டி சிரமத்துடன் ஆற்றைக்கடந்து கரைப்பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளனர், இந்தப்பகுதியில் உள்ள பெரியாற்றில் மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது, இதனை மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி இந்த பகுதியில் உள்ள பெரியாற்று பகுதியில் பாலம் அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.