ADGP Arun profile | சவுக்கு சங்கரை அலறவிட்ட IPS... யார் இந்த ADGP அருண்?

Continues below advertisement

என்னை கைது செய்து பார், என் மீது வழக்கு போட்டு பார் என்று ஒரு நாளைக்கு ஒன்பது முறை பேசிய சவுக்கு சங்கரை, பேச்சே இல்லாத அளவுக்கு இப்போது வைத்து செய்திருக்கிறது தமிழக காவல்துறை. என்னை சிறையில் தாக்கினார்கள் என்று முதலில் சொன்ன சங்கர், பின்னர் யாரும் தாக்கவில்லை என்று பல்டி அடித்தார். 

யாரை பற்றி, என்ன வேண்டுமானாலும் பேசலாம், ஆதாரமில்லாமல் எந்த அவதூறு வேண்டுமானலும் ஒரு வீடியோ மூலம் பரப்பலாம் என்று நினைப்பவர்களுக்கு சவுக்கு சங்கரின் கைது சம்மட்டி அடியாய் இறங்கியிருக்கிறது நாக்குமேல் பல்லை போட்டு பேசுவதாக புகாருக்குள்ளான சங்கருக்கு, அவர் பெயரின் முன்னே இருக்கும் சவுக்கையே எடுத்து ஒரு முறைக்கு ஒன்பது முறை சுழற்றி காட்டியிருக்கிறது தமிழக காவல்துறை

தமிழக காவல்துறையின் பெண் போலீசாரை அவதூறாக பேசிய சவுக்கு சங்கரை இனியும் பொறுத்துக்கொண்டு இருக்க வேண்டாம் என்று முடிவெடுத்து, உடனே களத்தில் இறங்கியவர்தான் தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் ஐபிஎஸ். அவர் எடுத்த துணிச்சலான முடிவால் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார், அவர் மீது வழக்கு மேல் வழக்குகள் வந்து விழுகின்றன. சென்னை மாநகர போலீஸ் குண்டர் தடுப்பு சட்டத்திலேயே சங்கரை கைது செய்திருக்கிறது. 

எத்தனையோ பேரை பற்றி சங்கர் பேசியபோதெல்லாம் மவுனமாக இருந்த காவல்துறை, பெண் காவலர்களை பற்றி அவர் பேசியதை பொறுத்துக்கொண்டு இருக்கவில்லை. அதற்கு காரணம், ஏடிஜிபி அருண். அவரின் உத்தரவாலேயே சவுக்கு சங்கர் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. 

தமிழகத்தில் டிஜிபிக்கு அடுத்த நிலையில் இருப   பவர்தான். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண். திமுக, அதிமுக என எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி, அருணுக்கு முக்கியமான பவர்ஃபுல் போஸ்டிங்கள் தரப்படும். அதற்கு காரணம், அவரது சிறப்பான செயல்பாடு. காவல்துறையில் சட்டம் ஒழுங்காக இருந்தாலும், குற்ற புலனாய்வாக இருந்தாலும் போக்குவரத்து துறையில் இருந்தாலும் தன்னுடைய சிறப்பான பணியின் மூலம் அதிரடிக்கு பெயர்போன ஆஃபிசர்-தான் அருண்.

1998 பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான அருண் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர். பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் சென்னையில் படித்துவிட்டு அதற்கு துளியும் தொடர்பில்லாத காவல்துறையை தன் வாழ்நாள் பணியாக தேர்வு செய்துகொண்டவர். அதற்கு காரணம், போலீஸ் உடுப்பு மீது அவருக்கு இருந்த காதல். அதனால்தான் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து காவல்துறை மேலாண்மை படிப்பில் பட்டயம் பெற முடிந்தது. 

ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, பயிற்சி முடிந்ததும் அவருக்கு போஸ்டிங் கிடைத்த இடம் நாங்குநேரி. ஒரு சிறு பொறி பட்டாலே கலவரம் ஆகிவிடும் கந்தக பூமி. அங்குதான் ஏ.எஸ்.பியாக தன்னுடைய பணியை தொடங்கினார் அருண்.  பின்னர் அதே மாதிரியான சூழல் கொண்ட தூத்துக்குடியிலும் அவர் சர்வீஸ் செய்ய வேண்டியிருந்தது. எஸ்.பியாக அவருக்கு பிரோமோஷன் கிடைத்ததும் கரூர், திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் பணியாற்றினார். அப்போதெல்லாம், சட்டம் ஒழுங்கிற்கு அவர் கொடுத்த முக்கியத்துவமும் குற்றங்களை குறைக்க அருண் எடுத்த நடவடிக்கைகளும் வெகுவாக பாரட்டப்பட்டது.

பின்னர் அவர் சென்னைக்கு பணி மாற்றம் செய்யப்பட்ட பிறகு அண்ணாநகரிலும் செய்ண்ட் தாமஸ் மவுண்ட் மாவட்டங்களிலும் DC யாக பணியாற்றினார். அப்போதெல்லாம், அவர் இரவில் எப்போது அழைப்பார், எங்கு சென்று ஆய்வு செய்வார் என்று பதறியபடியே காவல்நிலைய போலீசாரும், ரோந்து போலீசாரும் இருப்பர்.   திருச்சி சரக டிஐஜி, சென்னை போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு இணை ஆணையர், இரண்டு முறை திருச்சி மாநகர காவல் ஆணையர், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர் என பல்வேறு முக்கிய பொறுப்புகளில் மட்டுமே ஒவ்வொரு முறையும் அரசுகள் அவரை பணியில் அமர்த்தியது.

ஏடிஜிபியாக அவர் 2022ஆம் ஆண்டு பதவி உயர்வு வழங்கப்பட்டப்போது தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவுக்கு தலைவராகவும் பின்னர் புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி மாநகர காவல் ஆணையராகவும் திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த தாமரை கண்னன் ஓய்வு பெற்றதை அடுத்து அதி முக்கியத்துவம் வாய்ந்த அந்த பதவியை திமுக அரசு அருணுக்கு கொடுத்து கவுரவித்தது. அதன்பிறகு தமிழ்நாடு முழுவதும் ஏற்படும் குற்றங்களை கவனித்தும் போலீசாரின் நடவடிக்கைகளை ஆய்வு செய்தும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க பல்வேறு நடவடிக்கைகளை அருண் எடுத்து வந்தார். 

பல இடங்களில் நில பிரச்னையில் போலீசார் தலையிட்டு கட்டபஞ்சாயத்து செய்யும் தகவல்கள் அருணுக்கு வர, சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படாத நிலம் தொடர்பான சிவில் பிரச்னைகளில் போலீசார் தலையிட கூடாது என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தார் அருண். அதோடு, அப்படி ஏதும் தலையிட்டு தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மாவட்ட எஸ்.பியின் அனுமதியை பெற வேண்டும் என்று அவர் அனுப்பிய சர்குலர் பொதுமக்கள் வயிற்றில் பாலை வார்த்தது.

இந்நிலையில், சவுக்கு சங்கரை கைது செய்ய அறிவுறுத்தல் கொடுத்து மீண்டும் தான் அதிரடிக்கு பெயர் போன ஆஃபிசர் என்பதை ஏடிஜிபி அருண் நிரூபித்திருக்கிறார். அருணின் இந்த நடவடிக்கையால் காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram