Senthil Balaji Hospitalised : செந்தில் பாலாஜி அட்மிட்! மருத்துவர்கள் கூறியது என்ன?
நேற்று நெஞ்சு வலி காரணமாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்ப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார் செந்தில் பாலாஜி. தொடர்ந்து முயற்சித்தும் அவருக்கு ஜாமின் கிடைக்காத நிலையில், ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீரான பிறகு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில் செந்தில் பாலாஜிக்கு நேற்றும் மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மதியம் உணவு சாப்பிட்ட பிறகு நெஞ்சு வலிப்பதாக சிறைத்துறை அதிகாரிகளிடம் சொல்லியதாக தெரிகிறது. சிறை மருத்துவர்கள் முதலுதவி அளித்த பிறகு, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, மேலும் அவரை மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு இன்று விசாராணைக்கு வருகிறது. அவர் ஏற்கெனவே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் அவருக்கு ஜாமீன் கிடைக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஒரு வேளை ஜாமின் கிடைக்காவிடில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை மீண்டும் புழல் சிறைக்கே அழைத்து செல்லப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது