Yediyurappa Arrest? | சிறுமிக்கு பாலியல் தொல்லை எடியூரப்பாவுக்கு கைது வாரண்ட்!
போக்சோ வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை கைது செய்ய அம்மாநில போக்சோ சிறப்பு நீதிமன்றம், ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து அதிரடி காட்டியுள்ளது. இந்நிலையில் எடியூரப்பா எந்த நேரத்திலும் கைது செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது
உதவி கேட்டு வந்த 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் எடியூரப்பாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.கடந்த மார்ச் மாதம் பெங்களூர் சதாசிவ நகர் காவல் நிலையத்தில் எடியூரப்பா மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை கர்நாடகா மாநில சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் விசாரித்து வந்த நிலையில், தேர்தல் ஆதாயத்துக்காக தன்மீது இத்தகைய புகார் தெரிவிக்கப்படுகிறது என எடியூரப்பா மறுப்பு தெரிவித்திருந்தார்.
மேலும் போக்சோ வழக்கை ரத்து செய்யக் கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் எடியூரப்பா மனுத் தாக்கல் செய்திருந்தார்.இதனிடையே எடியூரப்பா மீது பலாத்கார புகார் கொடுத்த சிறுமியின் தாய் உடல்நலக்குறைவு காரணமாக திடீரென உயிரிழந்தார். தற்போது தேர்தல் முடிவடைந்துவிட்ட நிலையில் போக்சோ வழக்கின் கீழ் எடியூரப்பாவை கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் திடீரென கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதைத்தொடர்ந்து எடியூரப்பாவை விசாரணைக்கு சிஐடி அழைத்து சம்மன் அனுப்பியது. ஆனால் ஜூன் 17-ந் தேதிதான் தன்னால் விசாரணைக்கு வர முடியும் என எடியூரப்பா தெரிவித்திருந்தார்.இந்நிலையில் கர்நாடகா மாநில போக்சோ சிறப்பு நீதிமன்றம் எடியூரப்பாவை கைது செய்ய ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை பிறப்பித்துள்ளது. இதனால் எடியூரப்பா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.