
Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?
வேல்முருகன் அதிகப்பிரசங்கித்தனமாக பேசுகிறார் என்றும் அவர் மீது சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறிய நிலையில், இந்த கசப்புகளை தொடர்ந்து இனியும் திமுக கூட்டணியில் வேல்முருகன் தொடர வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதோடு பாமக உடன் அவர் கைகோர்க்க உள்ளதாக கூறப்படுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் உதய சூரியன் சின்னத்தில் நின்று பண்ருட்டி தொகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெற்றி பெற்றார். திமுக கூட்டணியில் அவர் இருந்தாலும் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆளும் திமுக அரசிற்கு எதிராக பேசிவருகிறர். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு எம்.எல்.ஏ பதவியை ராஜினாம செய்ய உள்ளதாக வேல்முருகனே கூறியதாக தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை நேரடியாக சந்தித்து பேசினார் வேல்முருகன். இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணிக்குள் அதிருப்தி சற்றே தணிந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தான் நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் தமிழ் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு , சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக சபாநாயகர் இருக்கை முன்பு ஆவேசமாக வேல்முருகன் பேசினார். இதனைத் தொடர் ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பேசுவதற்கே போராடிக் கொண்டிருந்தேன். அதனால், நாடாளுமன்றத்தில் எப்படி அவைத்தலைவர் முன்பு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்கிறார்களோ, அதுபோல நானும் எனது இருக்கையிலிருந்து சென்று அவைத்தலைவர் முன்பாக நின்று, என் கருத்தை முழுமையாகப் பதிவுசெய்ய நேரம் கொடுங்கள் என்று கேட்டேன். இது தவறா? இதற்கு சேகர்பாபு, ``நீ எதற்கெடுத்தாலும் முந்திரிக்கொட்டை மாதிரி முந்திப் பேசுகிறாய்" என்று ஒருமையில் என்னைக் குறித்துப் பேசினார். உடனே அவரிடத்துக்குச் சென்று, ``இதுபோன்று ஒருமையில் பேசக்கூடாது. கலைஞர் ஆட்சியில் போடப்பட்ட அரசாணையை கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சி நடைமுறைப்படுத்தவில்லை." என்று சொன்னேன். இது எப்படி வரம்புமீறிய செயல் ஆகும்”என்று பேசினார்.
முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்களை வேல்முருகன், கை நீட்டி பேசுவது, ஒருமையில் பேசுவது என்பது ஏற்புடையதும் அல்ல. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபா நாயகரிடம் கோரிக்கை வைத்தார். கடந்த சில மாதங்களாகவே திமுக கூட்டணிக்கு எதிராக சாடைமாடையாக பேசுவரும் வேல்முருகன் இப்போது பகிரங்கமாகவே பேசி ஆரம்பித்து விட்டார். இதனால் அவர் இனிமேலும் கூட்டணியில் நீடிக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது,
இச்சூழலில் தான் அவர் பாமக உடன் கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அண்மையில் பாமகவின் shadow budget- ஐ பாமக நிர்வாகிகள் வேலுமுருகனிடம் கொடுத்ததாகவும் இரமதாஸ் மற்றும் அன்புமணிக்கு வேல்முருகன் நன்றி தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தான் திமுக கூட்டணியுடனான இந்த மோதல் போக்கை தொடர்ந்து பாமக உடன் கைகோர்க்கும் முயற்சியில் வேல்முருகன் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.