Union Budget 2024 | பட்ஜெட்டில் MIDDLE CLASS எங்கே?கொந்தளிக்கும் வல்லுநர்கள்!
கார்ப்பரேட்களை விட தனிநபர்களே தற்போது அதிகமாக வரி செலுத்தி வருகின்றனர். இந்தநிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 40 சதவிகிதத்தில் இருந்து 35 சதவிகிதமாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து மத்திய பட்ஜெட்டில் மிடில் கிளாஸ் புறக்கணிக்கப்பட்டுள்ளனரா என்று விமர்சனம் எழுந்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மோடி தலைமையிலான அரசு, மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்ததை தொடர்ந்து முதல்முறையாக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் என்பதால் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், நடுத்தர வர்க்கத்தினரை புறக்கணிக்கும் விதமாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியா மக்கள் தொகையில் நடுத்தர வர்க்கத்தினரே அதிக எண்ணிக்கையில் வரி செலுத்துகின்றனர். ஒவ்வொரு முறையும் பட்ஜெட் நெருங்கும்போது அதில் தங்களுக்கு ஏதாவது சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படுமா என நடுத்தர வரக்கத்தினரிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுவது வழக்கம். ஆனால், வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி மூலமாக அரசுக்கு வரி செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினர், இந்த முறை பெரிய அளவில் புறக்கணக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 2 சதவகிதமே உள்ள நடுத்தர வர்க்கத்தினர், நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும், மக்கள் நலன் அரசியலுக்கும் பெரும் பங்களிப்பைச் செய்து வருகின்றனர். கடந்த 2023ஆம் ஆண்டு, மத்திய அரசு வெளியிட்ட தரவுகளின்படி, மொத்த மக்கள் தொகையில் 1.6 சதவிகிதத்தினர், அதாவது 2.24 கோடி இந்தியர்கள் மட்டுமே வருமான வரி, கார்ப்பரேட் வரி உள்பட வரிகள் செலுத்துகின்றனர். இந்தியாவில் நேரடி வரி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேரடி வரி என்றால் மக்கள் நேரடியாக செலுத்து வரி. நம் நாட்டை பொறுத்தவரையில், வருமான வரி மற்றும் கார்ப்பரேட் வரி ஆகியவை நேரடி வரியாகும்.
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், 2022-2023 நிதியாண்டில் கார்ப்பரேட்களிடம் இருந்து வரும் வரியை விட தனிநபர்கள் அதிக வருமான வரியை செலுத்துகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்களை விட, பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், வரிகளில் அதிக பங்களிப்பு செய்கின்றனர். தனிநபர் வரி மூலம் இந்தியா போன்ற நடுத்தர வருமான நாடுகளை நிர்வகிக்க முடியாது என பொருளதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்க போன்ற வளர்ந்த நாடுகளில்தான், கார்ப்பரேட் வரியை விட வருமான வரி அதிகம் வசூலிக்கப்படும். ஆனால், அமெரிக்காவில் எல்லாம் வரி செலுத்தும் மக்கள் தொகை அதிகம். அதாவது, மக்கள் தொகையில் 43 சதவிகிதத்தினர் வரி செலுத்துகின்றனர். ஆனால், இந்தியாவில் 2 சதவிகிதத்தினர் மட்டுமே வரி செலுத்துகின்றனர்.
இந்த நிலையில், இன்றைய பட்ஜெட்டில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 40 சதவிகிதத்தில் இருந்து 35 சதவிகிதமாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் மிடில் கிளாஸ் புறக்கணிக்கப்பட்டுள்ளனரா என்று விமர்சனம் எழுந்துள்ளது.