Deputy CM Udhayanidhi : கைமாறும் பொறுப்புகள்! தந்தை சுமையை ஏற்கும் உதயநிதி! உள்துறை அமைச்சரா?
“துணை முதல்வர் ஆகும் உதயநிதி ஸ்டாலின்” இன்று வெளியாகிறதா அமைச்சரவை மாற்றம்..?
ஒவ்வொரு முறை அமைச்சரவை மாற்றம் தொடர்பான தகவல் வரும்போதும் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக்கப்பட போகிறார் என்ற செய்தியும் அதோடு சேர்த்தே வரும். ஆனால், கடந்த 2 முறை நடந்த அமைச்சரவை மாற்றத்தில் அப்படி எந்த முடிவு எடுக்கப்படவில்லை. ஆனால், இந்த முறை நடத்தப்படவுள்ள அமைச்சரவை மாற்றத்தில் உதயநிதி மிக நிச்சயமாக துணை முதல்வராக நியமிக்கப்படப் போவது உறுதி என்கிறது அறிவாலய வட்டாரம்.
பொறுப்புகளை நிர்வகிக்கும் உதயநிதி – முடிவுகளும் அவரே எடுக்கிறார்
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் மாதம் இறுதியில் வெளிநாடு செல்லவுள்ளார். அதற்கு முன்னதாகவே உதயநிதியை துணை முதல்வராக ஆக்கிவிட்டு, தன்னுடைய பொறுப்புகளையும் தான் திரும்பி வரும் வரை பார்த்துக் கொள்ளுமாறு உதயநிதியிடமே ஒப்படைத்துவிட்டு, ஸ்டாலின் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
துணை முதல்வராக உதயநிதி அறிவிக்கப்படவில்லையென்றாலும் முதல்வருக்கு இணையாக அவரே, அரசில் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். ஒரு பிள்ளையாக தகப்பனுக்கும் ஒரு அமைச்சராக முதல்வருக்கும் சுமையை குறைக்கும் வகையில் பொறுப்புகளையெல்லாம் அவரே எடுத்துக்கொண்டு தற்போது செயலாற்றி வருகிறார்.
2009 ல் ஸ்டாலின் 2024ல் உதயநிதி
2009ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிந்து நிலையில், தமிழக வரலாற்றில் முதன் முறையாக உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலினை துணை முதலமைச்சாராக நியமித்தார் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி, அதே பாணியிலேயே இப்போது 2024 நாடாளுமன்ற தேர்தல் முடிந்து, அதில் திமுக கூட்டணி இமாலய வெற்றியை பெற்றிருக்கும் இந்த வேளையில் உதயநிதியை துணை முதல்வராக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுத்திருக்கிறார்.
உதயநிதி வசமாகும் உள்துறை ?
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக்கப்பட்டபோது முதல்வரின் கீழ் இருந்த சிறப்பு திட்ட செயலாக்கத்துறை உதயநிதிக்கு வழங்கப்பட்டது. அதனால், அப்போதே அவர் முதல்வருக்கு இணையான அதிகாரம் கொண்டவாராக மாறினார். இப்போது, காவல்துறையை கட்டுப்படுத்தும் உள்துறையும் முதல்வர் வசமிருந்து துணை முதல்வராக்கப்படும் உதயநிதி வசம் ஒப்படைக்கப்படும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
சமீபத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள், பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயலாளர் ஆம்ஸ்ட்ராங்க், நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார், சேலம் அதிமுக நிர்வாகி சண்முகம் உள்ளிட்டோர் கொலை செய்யப்பட்டது அரசியல் களத்தில் பெரும் அனலை கிளப்பியது. சட்டம் மற்றும் ஒழுங்கை கவனித்து நிர்வகிக்க வேண்டிய உள்துறை இந்த விவகாரத்தில் மெத்தனமாக இருந்ததே இதுபோன்ற செயல்கள் திமுக ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த காரணமாக இருந்ததாக கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் உடனடியாக உதயநிதி ஸ்டாலின் தலையிட்டதாகவும் அதன் காரணமாகவே, உள்துறை செயலாளர் அமுதா உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் நலத் திட்டங்களில் மட்டுமே தீவிர கவனம் செலுத்தும் விதமாகவும் அவரின் சுமையை குறைக்கும் விதத்திலும் காவல்துறையை கட்டுக்குள் வைத்திருக்கும் உள்துறை துணை முதல்வராக நியமிக்கப்படவுள்ள உதயநிதி வசம் ஒப்படைக்கப்படும் என்றும் இனி அவரே நேரடியாக தமிழ்நாட்டின் சட்டம ஒழுங்கு பிரச்னையை கவனிப்பார் என்றும் தலைமைச் செயலக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
அமைச்சர்களும் மாற்றமா ?
உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்பட்டு அவருக்கு கூடுதல் துறைகள் வழங்கப்படவுள்ள நிலையில், அமைச்சரவையிலும் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுத்திருக்கிறார்.
குறிப்பாக, ஒன்றுக்கும் மேற்பட்ட முக்கிய துறைகளை நிர்வகித்து வரும் அமைச்சர்களின் சுமையை குறைக்கும் விதமாக அந்த துறைகள் வேறு ஒருவருக்கோ அல்லது புதிய முகங்களை அமைச்சரவையில் இணைத்து அவர்களுக்கோ தரப்படும் என்று தெரிகிறது.
குறிப்பாக, நிதித்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை, போக்குவரத்து துறை, வருவாய் நிர்வாக துறை, வனத்துறை, சட்டத்துறை, உணவுத்துறை, பத்திர பதிவுத் துறை, பால்வளத்துறை ஆகிய துறைகளில் அமைச்சர்கள் மாற்றமோ அல்லது துறைகள் வேறு ஒரு அமைச்சருக்கு மாற்றத் தருவதோ நடைபெறலாம் என்று நம்பத்தகுகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று அமைச்சரவை மாற்றமா ?
முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த மாத இறுதியில் வெளிநாடு செல்லவிருந்த நிலையில், அவரது பயணத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு, ஆகஸ்ட் 22ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் முதல்வர் வெளிநாடு செல்லவிருந்ததால் அவர் செல்வதற்கு முன்னராக உதயநிதியை துணை முதல்வராக ஆக்கிவிட்டு, அமைச்சரவையையும் மாற்றி அமைத்துவிட்டு செல்லலாம் என்று நினைத்திருந்தார். அதன் காரணமாகவே, இன்று அமைச்சரவை மாற்றம் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரது பயணத் திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டதால், ஆகஸ்ட் 22ஆம் தேதிக்குள் அமைச்சரவை மாற்றம் நடக்கலாம் என்று தெரிகிறது.
நேற்று முதல்வரின் நிகழ்வுகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால், அமைச்சரவை மாற்றம் குறித்து அவர் ஆலோசிக்கிறார் என்றும் அதனால்தான் அவரது நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் பேசப்பட்டது. ஆனால், முதல்வரின் தனிப்பட்ட காரத்திற்காகவே நேற்று அவரது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
விரைவில் அமைச்சரவை மாற்றமும், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக்கப்படும் அறிவிப்பும் வெளியாகலாம்.