Savukku Shankar bail : இடைக்கால ஜாமின் ரெடி! ஆனாலும் ஜெயில் தான்! சோகத்தில் சவுக்கு

Continues below advertisement

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம். 

பிரபல யூடியுபரான சங்கர் பெண் காவலர்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து கஞ்சா வைத்திருந்ததாகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை, கோயம்புத்தூர் காவல்நிலையங்களில் அவர் மீது மேலும் சில வழக்குகள் பதிவாகின. அடுத்தடுத்த புகார்களை தொடர்ந்து, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார் அப்போதைய சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்.

சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்து அவரது தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட கருத்தை தெரிவித்ததால் அடுத்தகட்டமாக உச்சநீதிமன்றத்தை நாடினார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சவுக்கு சங்கரின் பேச்சு மற்றும் செயல் மன்னிக்க முடியாதுதான் என்று தெரிவித்தது. ஆனால் குண்டர் சட்டத்தில் அவர் மீது நடவடிக்கை எடுத்தது ஏன் என்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் அவர் நடந்து கொண்டாரா என்றும் தமிழக அரசை நோக்கி கேள்விகளை அடுக்கியது. அவரை இடைக்கால ஜாமினில் ஏன் விடுவிக்க கூடாது என்றும் கேட்டது. 

அனைத்து வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், குண்டாஸ் தொடர்பான சவுக்கு சங்கரின் தாயார் மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இன்று தமிழக அரசு தங்களது வாதத்தை எடுத்து வைத்தனர். அதில் சவுக்கு சங்கர் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து அரசுக்கு எதிராக தவறான கருத்துகளை தெரிவித்தது, அரசு ஆவணங்களை தயாரித்து அதை முறைகேடாக பயன்படுத்தியது போன்று பல்வேறு வழக்குகள் சவுக்கு சங்கர் மீது உள்ளது, மேலும் இது போன்று பல குற்றச்செயலகளில் அவர் தொடர்ந்து ஈடுப்பட்டு வந்தார் என்று வாதிடப்பட்டது. மேலும் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு அவரது தாயார் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றத்திற்கே அனுப்பி வைக்க  வேண்டும் என்று தமிழக அரசு வாதிட்டது.

இந்தநிலையில் சவுக்கு சங்கருக்கு குண்டர் சட்ட வழக்கில் ஜாமீன் வழங்குவதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

குண்டர் தடுப்பு சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மட்டுமே இந்த ஜாமீன் பொறுந்தும் என்றும் மற்ற வழக்குகளுக்கு இந்த ஜாமீன் பொருந்தாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். 

இதற்கிடையில் சவுக்கு சங்கர் தாயார் சார்பில் தொடரப்பட்ட ஆட்கொணர்வு மனுவை திரும்ப பெற்றுக்கொண்டதால் இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram