BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைசட்டம் ஒழுங்கில் சமரசமா? கொந்தளித்த விஜய்
பகுஜன் சமாஜ்வாதி கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ்வாதி கட்சி மாநில தலைவர் 52 வயதான ஆம்ஸ்ட்ராங், சென்னையில் அவரது வீட்டின் அருகிலேயே வைத்து வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவில் வசித்து வந்தார். அங்கு புதிதாக பெரிய அளவில் வீடு கட்டி வருவதால், தற்காலிகமாக அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். நாள்தோறும் மாலை நேரங்களில் தனது புதிய வீட்டின் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிடுவதோடு, அங்குள்ள தனது நண்பர்கள் மற்றும் கட்சிக்காரர்களை சந்திப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அந்த வகையில் நேற்று அங்கிருந்த போதுதான், 3 பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், கையில் பட்டா கத்தியுடன் ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதில் , படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், 8 பேர் சரண்டைந்துள்ளனர்.
இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது போன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்