”அமைச்சர் பதவி வேணாம்” சுரேஷ் கோபி பலே ப்ளான்! அதிர்ச்சியில் பாஜக
ஒரு பக்கா ப்ளானுடன் சுரேஷ் கோபியை பாஜக அமைச்சராக்கிய நிலையில், எனக்கு வருமானமே குறைந்து விட்டது என புலம்பி அந்த பதவியே வேண்டாம் என்ற நிலைக்கு வந்துள்ளார் சுரேஷ் கோபி. ஆனால் அமைச்சரானவுடனேயே அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும், பாஜக தான் சமாதானம் செய்து இத்தனை நாட்களாக பதவியில் உட்கார வைத்திருந்ததாகவும் சொல்கின்றனர்.
பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி 240க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். அவரது படங்கள் பெரும்பாலும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தன. 2016ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்து அரசியல் பயணத்தை தொடங்கிய பிறகு 2 முறை தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்தநிலையில் 2024ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் கேரளாவின் திரிச்சூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி ஆனார். இதன் மூலம் கேரளாவில் பாஜகவின் முதல் எம்.பி என்ற பெருமையை பெற்றார். அதனால் அவரிடம் பெட்ரோலிய துறை இணையமைச்சர் பொறுப்பை ஒப்படைத்தது பாஜக.
இதன் மூலம் கேரளாவை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தென் மாநிலங்களையும் கவர் செய்யும் வகையில் பாஜக இந்த முடிவை எடுத்ததாக பேச்சு அடிபட்டது. சுரேஷ் கோபியை அமைச்சராக்கியதன் மூலம் ஆபரேஷன் சவுத்தை கையில் எடுத்தது பாஜக. இந்தநிலையில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாக சொல்லி பாஜகவுக்கு ஷாக் கொடுத்துள்ளார் சுரேஷ் கோபி.
விழா ஒன்றில் பேசிய சுரேஷ் கோபி, ‘ நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். நான் சினிமாவில் நடிப்பதை தொடர வேண்டும் என நினைக்கிறேன். நிறைய சம்பாதிக்க வேண்டும். நான் மத்திய அமைச்சரான பிறகு எனது வருமானம் முற்றிலும் நின்று விட்டது. எனவே நான் சினிமாவில் நடிக்கவே விரும்புகிறேன். எனக்கு பதிலாக புதிதாக ராஜ்ய சபா எம்பியாக ஆக்கப்பட்டுள்ள சதானந்தனை மத்திய அமைச்சராக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
சுரேஷ் கோபி அமைச்சர் பதவியை ஏற்ற சில மணி நேரங்களிலேயே இதேமாதிரியான ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘எனக்கு எம்.பியாக பணியாற்ற தான் ஆசை. அமைச்சர் பதவி வேண்டாம் என்பதுதான் எனது நிலைப்பாடு. எனக்கு இதில் உடன்பாடு இல்லை என தலைமையிடம் சொன்னேன். நான் விரைவில் பதவி விலகிவிடுவேன் என நினைக்கிறேன். திரிச்சூர் மக்களுக்கு என்னை பற்றி தெரியும். நான் எம்.பியாக சிறப்பாக பணியாற்றுவேன்” என சொல்லியிருந்தார்.
அதன்பிறகு பாஜக தலைமை சுரேஷ் கோபியை சரிகட்டி பதவியில் வைத்திருந்ததாக சொல்கின்றனர்.
சமீபத்தில் சுரேஷ் கோபி நடிப்பில் வெளியான Janaki V vs State of Kerala திரைப்படம் எதிர்பார்த்த வசூலை தரவில்லை. அதனால் சுரேஷ் கோபி தனது சினிமா எதிர்காலத்தையும் கவனத்தில் வைத்து இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.