Subramanian Swamy : ”டைட்டானிக்காக மாறிய பாஜக! மோடிய மட்டும் நம்புனா” விளாசும் சுப்ரமணியன் சுவாமி
இடைத்தேர்தல் முடிவுகள் பாஜக டைட்டானிக் கப்பல் போல் நிரந்தரமாக மூழ்கிவிடும் என்பதை காட்டுகின்றன என்று பிரதமர் மோடியை ரவுண்டு கட்டியுள்ளார் சுப்ரமணியன் சுவாமி.
நாடு முழுவதும் 13 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. 10 தொகுதிகளில் வெற்றியை தட்டிச் சென்றது இந்தியா கூட்டணி. 4 தொகுதிகளில் காங்கிரஸும், 4 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸும், 1 தொகுதியில் ஆம் ஆத்மியும், ஒரு தொகுதியில் திமுகவும் வெற்றியை வசமாக்கின. மத்தியில் ஆளும் பாஜக 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஒரு தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.
அதுவும் உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது பாஜகவுக்கு பேரிடியை கொடுத்தது. பாஜக ஆட்சி செய்யக் கூடிய மாநிலத்திலேயே பாஜகவை பின்னுக்கு தள்ளியது காங்கிரஸ். மக்களவை தேர்தலில் உத்தரபிரதேசத்தின் அயோத்தியாவில் பாஜகவுக்கு கிடைத்த தோல்வியை தொடர்ந்து, பத்ரிநாத்திலும் தோல்வியை சந்தித்துள்ளது எதிர்க்கட்சிகளின் விமர்சன வலையிலும் சிக்கியுள்ளது. இந்துத்துவத்தை வைத்து பாஜக அரசியல் வைத்து வருவதாகவும், பத்ரிநாத் தோல்வி பாஜகவின் சரிவை குறிப்பதாகவும் காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
இந்தநிலையில் இடைத்தேர்தலில் பாஜகவின் தோல்வியை வைத்து பிரதமர் மோடியை சுப்ரமணியன் சுவாமியும் கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜகவினர் நமது கட்சி டைட்டானிக் கப்பல் போல் மூழ்க வேண்டும் என விரும்பினால், அதற்கு கட்டளையிட வேண்டிய இடத்தில் இருக்க வேண்டிய சரியான நபர் மோடிதான். இடைத்தேர்தல் முடிவுகள் பாஜக மூழ்கிக் கொண்டிருப்பதை காட்டுகிறது என கூறியுள்ளார்.
ஏற்கனவே மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி ஆட்சி அமைக்காத நிலையில், இடைத்தேர்தலிலும் சரிவை சந்துள்ளதற்கு எதிர்க்கட்சியினர் மட்டுமல்லாமல் சுப்ரமணியன் சுவாமியும் விமர்சித்துள்ளது சமூக வலைதளங்களில் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.