செங்கோட்டையன் டெல்லி விசிட்! பாஜகவினருடன் முக்கிய MEETING? அடுத்த ப்ளான் என்ன?
செங்கோட்டையனின் கட்சிப் பொறுப்புகளை பறித்து இபிஎஸ் ஆக்ஷனில் இறங்கிய நிலையில், செங்கோட்டையன் டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்திக்கவிருப்பதாக பேச்சு அடிபடுகிறது.
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, தினகரன், ஒபிஎஸ்-ஐ மீண்டும் கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒருங்கிணைக்க 10 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அந்த மனநிலையில் உள்ளவர்கள் ஒன்றாக சேர்ந்து ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுவோம் என கெடு விதித்தார். அவரது கருத்துக்கு சசிகலா, ஓபிஎஸ், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில் திமுக மூத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோருடன் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் திண்டுக்கலில் அவசர ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளை பறித்து இபிஎஸ் நடவடிக்கை எடுத்தார். கழக அமைப்பு செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அதோடு சேர்த்து அவரது ஆதரவாளர்கள் 7 பேரின் பதவிகளும் பறிக்கப்பட்டன.
அதேபோல் செங்கோட்டையனுக்கு ஆதரவாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கானோர் கட்சியில் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் செங்கோட்டையன் டெல்லி செல்லவிருப்பதாக தெரிகிறது. பாஜக தலைவர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக சொல்கின்றனர்.
ஏற்கனவே அதிமுக பாஜக கூட்டணி அமைந்த சமயத்தில் செங்கோட்டையன் தனியாக சென்று மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியது இபிஎஸ்-க்கு அதிருப்தியை கொடுத்தது. தற்போது செங்கோட்டையன் தலைமைக்கு எதிராகவே குரல் கொடுத்துள்ள நிலையில், நிலைமையை சரிகட்ட பாஜக தலைமை அவரை டெல்லி அழைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்த சந்திப்பு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பாக செங்கோட்டையன் முடிவெடுக்கவிருக்கிறாராம்.
இந்தநிலையில் கோவை விமான நிலையத்திற்கு வந்த செங்கோட்டையனிடம் டெல்லி பயணம் பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது, ஹரித்துவார் சென்று ராமரை தரிசிப்பதற்காக கிளம்புவதாக தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு நிறைய பேர் ஆதரவாக நிற்பதாகவும், அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும், கட்சி வளர வேண்டும் என்றும் மீண்டும் பேசியுள்ளார். இருந்தாலும் இந்த பயணத்தின் போது அவர் பாஜக மூத்த தலைவர்களை சந்திப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவே சொல்கின்றனர்.