ஏர்போர்ட் மூர்த்தி கைது! இரவோடு இரவாக தூக்கிய POLICE! DGP அலுவலகம் முன் கைகலப்பு
விசிக நிர்வாகிகளை கத்தியை வைத்து தாக்கியதாக ஏர்போர்ட் மூர்த்தியை போலீசார் இரவோடு இரவாக கைது செய்துள்ளனர்.
புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி விசிக தலைவர் திருமாவளவனை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அவர் திருமாவளவனை ஒருமையில் பேசும் வீடியோ சமீபத்தில் வெளியாகி விசிகவினரை கோபத்தில் ஆழ்த்தியது. இந்தநிலையில் டிஜிபி அலுவலகம் முன்பு ஏர்போர்ட் மூர்த்தி மீது விசிக நிர்வாகிகள் தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏர்போர்ட் மூர்த்தியை செருப்பால் அடித்த நிர்வாகிகள் தகாத வார்த்தைகளில் பேசினர். இந்தநிலையில் அப்போது ஏர்போர்ட் மூர்த்தி பாக்கெட் கத்தியால் விசிகவினரை தாக்கியதாக கூறப்படுகிறது. டிஜிபி அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுக்க முயன்றும் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.
டிஜிபி அலுவலகம் முன்பே தாக்குதல் நடந்ததற்கு பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஏர்போர்ட் மூர்த்தி திருமாவளவனின் பட்டியலின சமூக விரோத போக்கை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறேன். திருமாவளவன் என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார் என்று 2 முறை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் என தெரிவித்தார்.
இந்தநிலையில் விசிகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏர்போர்ட் மூர்த்தியை போலீசார் இரவோடு இரவாக கைது செய்துள்ளனர். அவர் பாக்கெட் கத்தியால் தாக்கியதில் 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆபாசமாக பேசுதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்துள்ளனர்.