DMK BJP | திமுக-பாஜக திடீர் நட்பு! ஸ்டாலின் போடும் கணக்கு! தூதுவிடும் எடப்பாடி
திமுகவை ஊழல் அரசு என்று விமர்சித்தது, பட்ஜெட்டில் தமிழ்நாட்டை ஒதுக்கி வைத்தது, பாஜகவும், திமுகவும் மாறி மாறி குறை சொன்னது என எதிரும் புதிருமாக இருந்த 2 கட்சிகள் தற்போது திடீர் நட்பு பாராட்டுவது ஏன் என்று என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு ஆரம்பமாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாணய வெளியீட்டை ஒட்டி தமிழக அரசியல் களமும் சூடுபிடிக்க ஆரம்பித்தது. இதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும், இந்தியாவின் வளர்ச்சியிலும் எப்போதும் ஆர்வம் கொண்டவராக கருணாநிதி திகழ்ந்தார் என்றும், அவரை போன்ற தலைவர்களின் தொலைநோக்குப் பார்வையும் சிந்தனைகளும் தேசத்தின் வெற்றி பயணத்தில் தொடரும் என்றும் பாராட்டியிருந்தார். அதனை தொடர்ந்து கலைஞரின் நினைவு நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டது என இந்த 2 சம்பவங்களை கையில் எடுத்து விமர்சனத்தை ஆரம்பித்து வைத்தது அதிமுக.
திமுக, பாஜக ரகசிய உறவு வைத்துள்ளதாக பற்றவைத்தார் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ். கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா திமுக நடத்திய நிகழ்ச்சி அல்ல, இது மத்திய அரசின் நிகழ்ச்சி, நாங்கள் எந்தவித ரகசிய உறவும் வைத்துள்ள தேவையில்லை என்று பதிலடி கொடுத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். திமுக, பாஜக கூட்டணி தொடர்பாக மறுப்பு தெரிவித்தார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன். ஆனால் நேற்றில் இருந்து திமுக, பாஜகவை சுற்றி சமூக வலைதளங்களில் நிறைய கேள்விகள் வலம்வந்து கொண்டிருக்கின்றன. நாணய வெளியீட்டுக்கு வந்த அமைச்சர் ராஜ்நாத் சிங், கலைஞர் நினைவிடத்திற்கு சென்றதன் பின்னால் அரசியல் இல்லையா என்ற கேள்வியை முன்வைக்கின்றனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கலைஞர் நினைவிடத்திற்கு வந்தது விவாதமாக மாறியது. இந்த நிகழ்ச்சிக்கே முதலமைச்சரே அண்ணாமலைக்கு போன் செய்து அழைத்த தகவல் வெளியானது கூட்டணி கட்சிகளுக்கே அதிருப்தியை கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதேபோல் ஆளுநருக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த திமுக, திடீரென ட்விஸ்ட் கொடுத்து ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொண்டது ஏன்? அதற்கு பின்னணியிலும் பாஜக இருக்கிறதா என விமர்சிக்கின்றனர் அரசியல் நோக்கர்கள். மக்களவை தேர்தல் நேரத்தில் ”திமுக தங்கள் குடும்பத்தை பற்றி மட்டுமே நினைக்கும் கட்சி. மக்களுக்காக எதுவும் செய்யாது” என சொன்ன பிரதமர் மோடி தற்போது கலைஞரின் தொலைநோக்கு பார்வை இந்தியாவை வழிநடத்தும் என சொல்லியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியை விழாவுக்கு அழைக்காதது ஏன் என்று இபிஎஸ் கேட்டதும் விவாதத்தில் சிக்கியுள்ளது. நாணயத்தை மத்திய அரசு சார்பில் ஒருவர் வெளியிடுவது தான் சரியாக இருக்கும் என திமுகவினர் சொல்லும் நேரத்தில், ராகுலையும் அழைத்திருந்தால் நடுநிலையாக இருந்திருக்குமே என்று கேட்கின்றனர் எதிர் தரப்பினர். இல்லையென்றால் குடியரசு தலைவர் போன்றவர்களை வைத்து நாணயம் வெளியிட்டிருந்தால் கட்சி சார்பில்லாமல் இருந்திருக்கும் என்ற வாதமும் இருக்கிறது.
பாஜகவுடன் மோதிக் கொண்டிருந்த திமுக தற்போது இணக்கமான சூழலை உருவாக்குவது தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை பெறுவதற்காக தான் என சொல்கின்றனர் ஒரு தரப்பினர். ஆனால் இதனை பயன்படுத்தி திமுக கூட்டணிக்குள் மாற்றத்தை கொண்டுவர அதிமுக காய்களை நகர்த்த வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது.