Sasikala vs EPS | ”இதான் இந்த பேட்டை பாயுற நேரம்” ஆட்டத்தை தொடங்கும் சசிகலா! கலக்கத்தில் EPS

Continues below advertisement

முதலில் ஒரு தேர்தலாவது அவரை ஜெயிக்க சொல்லுங்க என்ற குரல்கள் இபிஎஸ்ஸுக்கு எதிராக அதிமுகவிற்குள் எழுந்துள்ள நிலையில், இதுதான் சரியான நேரம் என்று பாயத் தொடங்கியுள்ளார் சசிகலா.. நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் மூலம் அதற்கு தொடக்கப்பள்ளி வைத்துள்ள அவர் விரைவில் ஓபிஎஸ்-ஐ நேரில் சந்திக்க உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் அதிமுகவிற்குள் புயலை கிளப்பியுள்ளது..

அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவி ஏற்ற எடப்பாடி பழனிச்சாமி, முழு அதிகாரத்தையும் கைப்பற்றி விடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில் அவருடைய கனவில் மண்ணை வாரி போட்டுள்ளது மக்களவைத் தேர்தல் முடிவுகள். 

போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்து ஏழு தொகுதிகளில் டெபாசிட்டை இழந்து, சில இடங்களில் ஜஸ்ட் மிஸ்ஸில் நாம் தமிழரை நான்காவது இடத்திற்கு தலி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது அதிமுக. பொதுச் செயலாளர் ஆக பொறுப்பேற்ற பின் அவர் சந்திக்கும் இரண்டாவது தேர்தல் இது. இதற்கு முன்னதாக ஈரோடு இடைத்தேர்தலிலும் அதிமுக தங்களுடைய கோட்டையான கொங்கில் தோல்வி கண்டது. ஆனால் அதையாவது ஆளுங்கட்சி, பண பலம் என சொல்லி கடந்து விடலாம். ஆனால் தற்போதைய பொது தேர்தல் தோல்விக்கு இபிஎஸ் என்ன காரணம் சொன்னாலும் அதிமுக தொண்டர்களாலேயே அதை கடந்து செல்ல முடியவில்லை. 

ஆயிரம் விமர்சனம் இருக்கட்டும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தன்னுடைய சொந்த தொகுதியான தேனியில் மகனை வெற்றி பெற வைத்தார் ஓபிஎஸ். ஆனால் உங்கள் சொந்த தொகுதியான சேலத்தில் உங்களால் கடந்த முறையும் சரி இம்முறையும் சரி வெற்றி பெற முடியவில்லை. அப்படி இருக்கையில் எப்படி நீங்கள் நான்தான் ஒற்றை தலைமை என்று சொல்லிக் கொள்கிறீர்கள் என்ற கேள்வியை அதிமுக தொண்டர்கள் சரளமாக கேட்க தொடங்கி விட்டார்கள்.

சரி ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்து விட்டோமே, வேலை பார்க்காத நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் மீது குறைந்தபட்சம் நடவடிக்கையாவது எடுக்கப்பட்டதா என்றால் அதுவும் இல்லை. வெற்றி பெறவும் முடியவில்லை கட்சி நிர்வாகிகளை கட்டுப்படுத்தவும் முடியவில்லை அப்புறம் இது என்ன தலைமை என்பதுதான் பலரின் கேள்வி. 

தன்னை மீறி பலர் செயல்படுவது தெரிந்தும் அவர்களை தட்டிக் கேட்க முடியாத நிலை எடப்பாடி பழனிச்சாமிக்கு உருவாக்கியுள்ளது. இதையெல்லாம் பார்த்த சசிகலா, இது தான் கட்சியை உடைக்க சரியான நேரம் என்று முடிவு செய்து, எண்ட்ரி கொடுக்கவும் தயாராகிவிட்டார், அதை பகீரங்கமாக பிரஸ் மீட் கொடுத்து அறிவிக்கவும் செய்துவிட்டார்.

இது தான் எடப்பாடி பழனிச்சாமி டீமுக்கு தற்போது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளியே தேம்பாக காட்டிக்கொண்டாலும், இருக்குற பிரச்சனையில் இது வேறையா என்று அப்செட்டில் இருக்கிறாராம் எடப்பாடி.

காரணம் பயணம் மேற்கொள்ளபோவதாகவும், தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் சசிகலா தெரிவித்துள்ள நிலையில், அப்படி அதிமுகவினர் சந்தித்தால், அவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும். அப்போது அவர்களும் எதிர்ப்பையும் சம்பாதிக்க நேரிடும், அது இன்னும் கட்சியை பலவீனம்தான் படுத்தும்.

மேலும் பாஜக கூட்டணி வேறு வேண்டாம் என்று சொல்லிவிட்டோம், மத்தியில் அடுத்த ஐந்து ஆண்டுகளும் அவர்கள் தான் அப்படி இருக்கையில், ஏற்கனவே இருக்கும் டிடிவி தினகரன், ஓ.பி.எஸ் உடன் இவ்ளவு நாள் அமைதியாக இருந்த சசிகலாவும் இணைந்தால், பாஜக தயவோடு கட்சியை உடைக்கும் பணிகளை மேற்கொள்வார்கள் என்பது இபிஎஸ்ஸுக்கு தெரியும். கட்சியில் பல நிர்வாகிகள் தற்போதும், சசிகலா அழைத்து ஒரு விஷயத்தை சொன்னால் அதை தட்டமுடியாதவர்கள் தான், காரணம் அந்த பதவியை இதற்கு முன் அவருக்கு வழங்கியதே சசிகலா தான் என்ற சூழலில் மிக பெரிய உட்கட்சி பூசலுக்கு அதிமுக தயாராகி வருகிறது. இந்நிலையில் இதனை எப்படி எதிர்கொள்ளபோகிறார் எடப்பாடி பழனிசாமி என்ற கேள்வி எழுந்துள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram