RN Ravi : ராஜ்நாத்திடம் பேசிய ஸ்டாலின்? டெல்லி விரையும் RN.ரவி பின்னணி என்ன?
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று அவசரமாக டெல்லி புறப்பட்டு செல்கிறார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்டவர்களை அவர் சந்தித்து பேசவுள்ளதாக ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் ஆளும் திமுக அரசுக்கும் பல்வேறு விவகாரங்களில் மோதல் வெடித்த வருகிறது. திராவிட கொள்கை மீதான விமர்சனம் முதல் புகைப்படத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது வரை பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் நிலவி வருகிறது.
திராவிட மாடல் என்பது காலாவாதியான கொள்கை என்றும் அது பிரிவினைவாதத்தை தூண்டுவதாக உள்ளது என கூறி, திமுகவை தொடர்ந்து சீண்டி வருகிறார் ஆளுநர் ஆர். என். ரவி. ஆளுநரின் இந்த செயல்பாடுகளுக்கு திமுகவும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்தநிலையில் தமிழ்நாடு ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவியின் பதவி காலம் கடந்த ஜூலை 31ஆம் தேதியே முடிந்துவிட்ட நிலையில், தொடர்ந்து அவர் தமிழ்நாட்டின் ஆளுநராகவே தொடர்ந்து வருகிறார். ஆனால், புதிய ஆளுநர் குறித்தோ அல்லது ரவியின் பதவியை நீட்டிப்பது பற்றியோ எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் குடியரசுத் தலைவர் இதுவரை பிறப்பிக்கவில்லை. இந்நிலையில், ஆளுநர் ரவி இன்று மாலை டெல்லி செல்லவுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நேற்று கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணையம் வெளியிட சென்னை வந்த ராஜ்நாத் சிங்கிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே அவரை டெல்லி வரச் சொல்லி உத்தரவு வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது