Ravikumar vs Aadhav arjuna : ”இப்படி பேசலாமா ஆதவ்” விசிகவில் வெடித்த கலகம்! ரவிக்குமார் போர்க்கொடி

Continues below advertisement

திமுகவை விமர்சித்த ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக விசிகவில் இருந்தே எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது. அரசியல் ரீதியாக பக்குவமில்லாத பேச்சு என போர்க்கொடி தூக்கியுள்ளார் விசிக எம்.பி ரவிக்குமார்.

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என விசிகவில் கடந்த சில நாட்களாக பேச்சு அடிபடுகிறது. இதனால் கூட்டணிக்குள் விரிசல் ஏற்படுமா என்று விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்தை மேலும் பற்றவைத்தார் விசிக துணை பொதுசெயலாளர் ஆதவ் அர்ஜூனா. 4 ஆண்டுகளுக்கு முன்பு சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களே துணை முதல்வராகும் போது, 40 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட எங்கள் தலைவரை துணை முதல்வராக்குவதில் தவறில்லையே என்று கேட்டது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இப்படி விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கும் போது அவர்களையே நம்பி இருக்கும் சமூகங்கள் முழுமையாக பயனடையும், அதனால் விசிகவை அதிகாரத்திலும் பங்கெடுக்க வைப்பதுதான் எனது நோக்கம் என்று கூறியிருந்தார்.

ஆதவ் அர்ஜூனாவின் பேச்சுக்கு விசிக தரப்பில் இருந்தே எதிர்ப்பு குரல் வந்துள்ளது. கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் விசிக துணையில்லாமல் வட மாநிலங்களில் திமுக வெற்றி பெறாது என பேசியதற்கு விசிக எம்.பி ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தி ஹிந்துவுக்கு கொடுத்த பேட்டியில், ”ஆதவ் அர்ஜூனா பேசியது உண்மைக்கு புறம்பானது மற்றும் அரசியல் பக்குவமில்லாத பேச்சு. கொள்கைகள் அடிப்படையிலேயே திமுக கூட்டணி வெற்றி பெற்றிருப்பதை அளவிட வேண்டும். மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறுவதற்கு விசிக உதவியது. அதே போல் திமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் 2 எம்.பி தொகுதிகள் மற்றும் 4 எம் எல் ஏ தொகுதிகளில் விசிக வெற்றி பெற்றது. அதனை மறுக்க முடியாது” என கூறியுள்ளார்.

ஏற்கனவே ஆதவ் அர்ஜூனா பேட்டி சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறிய போது, ரவிக்குமார் அதனை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். முதலமைச்சர் ஸ்டாலினும், திருமாவளவனும் ஒன்றாக இருக்கும் ஃபோட்டோவை பதிவிட்டு, விழிப்போடு இருப்போம்! புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் , மாமேதை மார்க்ஸ் ஆகியோரின் கொள்கை வழியில் எம்மை வழிநடத்திக் கொண்டிருக்கும் தலைவர் எழுச்சித் தமிழர் 
@thirumaofficial
இன்று இந்திய அளவில் உற்று நோக்கப்படும் கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை உருவாக்கி இருக்கிறார். சனாதனத்துக்கு எதிரான சமரசமற்ற அவரது நிலைப்பாடுதான் அதற்கு முதன்மையான காரணம். ‘அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பது! சனாதனிகளின் அரசியலை வீழ்த்துவது!’ என்ற நமது இலக்குகள் இன்னும் எட்டப்படவில்லை. நமது கொள்கை எதிரிகள் இன்னும் அதிகாரப் பீடத்திலிருந்து அகற்றப்படவில்லை. அவர்கள் தமிழ்நாட்டைக் குறிவைத்துக் காய் நகர்த்துகிறார்கள். தாம் செல்வாக்கு பெறுவதற்கு ஏதுவாகத் தமது எதிர்ப்பு வாக்குகளைச் சிதறடிப்பது அவர்களின் உத்திகளில் ஒன்று. தமிழ்நாட்டிலுள்ள மதச்சார்பற்ற சக்திகள் அனைவரும் அடுத்துவரும் இரண்டு ஆண்டுகளிலும் முன்னிலும் விழிப்போடு இருக்க வேண்டும். ‘ சமூக நீதிக்கும், சமத்துவத்துக்கும் எதிரான பாஜகவை தமிழ்நாட்டில் காலூன்ற விட்டுவிடக்கூடாது ’ என்பதே 2026 சட்டப் பேரவைத் தேர்தல் களத்தில் நமது முதன்மையான பணியாக இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram