Ramadoss vs Anbumani : வேண்டும்.. வேண்டாம்..ராமதாஸ் vs அன்புமணி! குழப்பத்தில் பாமக!

Continues below advertisement

வேண்டும் வேண்டாம் என மீண்டும் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே விக்ரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கருத்து வேறுபாடு நிகழ்வதாக தகவல் வெளியாகி உள்ளது..

அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக படுதோல்வியை சந்தித்தது. ஆனால் இந்த கூட்டணி அமைவதற்கு முன்பே இறுதிவரை பாமக அதிமுக பக்கம் சாய போகிறதா அல்லது பாஜக பக்கம் செல்ல போகிறதா என்ற குழப்பம் நீடித்துக் கொண்டே இருந்தது. 

எடப்பாடியை சந்தித்து ஓகே செய்து விட்டார்கள் பாமக இம்முறை அதிமுகவுடன் தான் கூட்டணி சேரப் போகிறது என்று தகவல்கள் வந்த போது திடீரென பாஜகவுடன் சேர்ந்து மக்களவைத் தேர்தலை சந்திப்பதாக பாமக அறிவித்தது.

குறிப்பாக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று ராமதாஸ் பலமுறை மறுத்ததாகவும், ஆனால் பிடிவாதமாக பாஜக கூட்டணிக்கு தான் செல்ல வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியதால் தான் இறுதியில் பாமக பாஜக கூட்டணியில் இடம் பெற்றது என்று சொல்லப்பட்டது. 

இந்நிலையில் ஜூலை 10ஆம் தேதி விக்ரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக தங்களுடைய வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கிவிட்ட நிலையில், அதிமுகவும் விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளரான பன்னீர்செல்வத்தை கலமரக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. யாரும் வர வேண்டாம் வெற்றி நிச்சயம் நான் பார்த்துக் கொள்கிறேன் என சீவி சண்முகம் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு தயாராகி வருவதாக தெரிகிறது. 

இப்படி இரண்டு கட்சிகளும் அடுத்த இடைத்தேர்தலுக்கு தயாராகி விட்ட நிலையில் பாமகவில் போட்டியிடலாமா வேண்டாமா என்பதிலேயே தற்போது வரை குழப்பம் நீடித்து வருகிறது.

இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்பது பாமகவின் கொள்கை. ஆனால் அதை மாற்றும் வகையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட அன்புமணி விரும்புவதாக தெரிகிறது. 

ஆனால் ஆளுங்கட்சி முழு பண பலத்தோடும் அரசு இயந்திரத்தின் உதவியோடும் களமிறங்கும் இடைத்தேர்தலில் போட்டியிட கூடாது என்பது ராமதாஸின் விருப்பம். 

அதனால் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, விக்கிரவாண்டி தேர்தலில் பாமக போட்டியிட வேண்டும் என்று சொல்லி இருப்பதாகவும், அதன் காரணமாகவே அன்புமணியும் தீவிரமாக போட்டியிட விரும்புவதாக தெரிகிறது. மேலும் தொண்டர்களை உற்சாகமாக வைத்திருக்க இது உதவும் என்றும் அன்புமணி கணக்கு போடுகிறார். இந்நிலையில் விரைவில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் இணைந்து அறிவிப்பை வெளியிடவும் அன்புமணி தயாராகி வருவதாக தெரிகிறது. 

ஆனால் பாமகவை பொறுத்தவரை உறுதியான அறிவிப்பு வெளிவரும் வரை எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் பொறுத்திருந்து பார்ப்போம்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram