Rahul Gandhi : ”நான் தப்பா பேசுனேனா..என்னை தடுக்க முடியாது” ராகுல் ஆவேசம்

அமெரிக்காவில் நான் பேசியது என்ன தவறு என்று சீக்கியர்கள் குறித்த தனது பேச்சு குறித்து பா.ஜ.க. பொய்களை பரப்பி வருவதாக ராகுல் காந்தி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சமீபத்தில் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் வசிக்கும் சீக்கியர்கள் தங்கள் மத அடையாளமான தலைப்பாகை அணிவதற்கே போராட வேண்டி உள்ளது. இந்த பிரச்சினை அனைத்து மதத்தினருக்கும் உள்ளது என்றார்.

இவரது இந்த கருத்துக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். சீக்கியர்கள் குறித்த கருத்தை ராகுல் திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில், தனது பேச்சு குறித்து பா.ஜ.க. பொய்களை பரப்பி வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், வழக்கம் போல் பா.ஜ.க. பொய்களை கையில் எடுத்துள்ளது. அவர்களால் உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாததால் என்னை அமைதியாக்க நினைக்கிறார்கள். ஆனால் வேற்றுமையில் ஒற்றுமை, சமத்துவம் மற்றும் அன்பு ஆகிய இந்தியாவின் அடிப்படை பண்புகளுக்காக எப்போதும் குரல் கொடுப்பேன்.

அமெரிக்காவில் நான் கூறிய கருத்து குறித்து பா.ஜ.க. பொய்களை பரப்பி வருகிறது. இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள ஒவ்வொரு சீக்கிய சகோதர, சகோதரிகளையும் நான் கேட்க விரும்புகிறேன், நான் கூறியதில் ஏதேனும் தவறு இருக்கிறதா? ஒவ்வொரு சீக்கியரும், ஒவ்வொரு இந்தியரும், அச்சமின்றி தங்கள் மதத்தை சுதந்திரமாகப் பின்ற்றும் நாடாக இந்தியா இருக்க வேண்டாமா?" என்று பதிவிட்டுள்ளார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola