கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
பாமகவில் தந்தை மகனுக்கு இடையே மோதல் வெடித்து வரும் நிலையில் அக்கட்சியில் இருந்து கொத்துக்கொத்தாக விலகி தொண்டர்கள் மாற்றுக்கட்சியில் சேரத் தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இந்நிலையில் கடலூரில் பாமகவில் இருந்து விலகி 200க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே சமீபகாலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது.ஒரு புறம் ராமதாஸ் நிர்வாகிகளை நீக்கி உத்தரவிட்டால் மறுபுறம் அன்புமனி நீக்கிய நிர்வாகிகளை மீண்டும் நியமித்து வருகிறார். இப்படி நாளுக்கு நாள் தந்தையும் மகனும் மாறி மாறி செயல்பட்டுவருகின்றனர். நேற்று அன்புமணி, திலகபாமா, வழக்கறிஞர் பாலு, வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்த தலைமை நிர்வாகக் குழுவை கலைப்பதாக ராமதாஸ் அறிவித்தார். இந்த குழுவுக்கு பதிலாக பனையூர் அன்புமணி, ஜி.கே. மணி, அருள், பரந்தாமன், தீரன், அருள்மொழி உள்ளிட்ட 21 பேர் அடங்கிய புதிய நிர்வாகிகள் பட்டியலையும் அவர் வெளியிட்டார்.இதனால் பாமக தொண்டர்கள் யார் பக்கம் செல்வது என்று குழும்பிப்போய் உள்ளதாக சொல்கின்றனர்
இச்சூழலில் தான் சமீப நாட்களாக பாமக தொண்டர்கள் மாற்றுக்கட்சியில் இணைந்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், கடலூரில் பாமகவில் இருந்து விலகி 200க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்துள்ளனர். அதிமுக கடலூர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் கழக அமைப்பு செயலாளரும், மாவட்ட கழக செயலாளருமான சொரத்தூர். இரா.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது . தமிழகத்தை மீட்போம் மக்களைக் காப்போம் என்று பிரச்சார பயணத்தை மேற்கொண்டுள்ள அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடலூருக்கு வருகை தர உள்ள நிலையில் ஏற்பாடு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பாமக முன்னாள் மாவட்ட செயலாளர் காசி. நெடுஞ்செழியன் அவர்களுடன் 200க்கு மேற்பட்ட பாமக கட்சியினர் நேரில் சந்தித்து அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி விவகாரத்தால் பாமகவிலிருந்து விலகி 200க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்த சம்பவம் பாமகவில் சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது.