Operation Sindoor தாக்குதல் ரவுண்டு கட்டும் எதிர்க்கட்சிகள் வாய் திறப்பாரா மோடி?
நாடாளுமன்ற மக்களவையில் ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக ரவுண்டு கட்டியுள்ள எதிர்க்கட்சிகளின் பல கேள்விகளுக்கு மோடி வாய்திறப்பாரா? இல்லை நேரு செய்த தவறு என பழைய புராணத்தை பாடி ஏமாற்றி விடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது. ஆனால், பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூர், பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் குடியரசு துணை தலைவரின் திடீர் ராஜினாமா ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தான், வரும் 28ம் தேதி அன்று மக்களவையிலும், 29ம் தேதி மாநிலங்களவையிலும் ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவாதத்திற்காக 16 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதால், ஒவ்வொரு அவையிலும் தலா இரண்டு நாட்கள் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், அரசு இதுவரை பதில் அளிக்காத பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதால் பல முக்கிய கேள்விகளை கொண்டு மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளன. உளவுத்துறையும், பாதுகாப்பு அமைப்பும் பஹல்காம் தாக்குதலை தடுப்பதில் தோல்வியுற்றதுஏன்? பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தற்போது வரை கைது செய்யப்படாதது ஏன்? பாகிஸ்தான் உடன் ஆன ஆயுத தாக்குதலில் இந்தியாவின் கை ஓங்கி இருந்திருந்தால், தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டது ஏன்? இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அழுத்தத்தால் கொண்டு வரப்பட்டதா? ஆப்ரேஷன் சிந்தூரின் போது இந்தியாவின் எத்தனை போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன? சேதம் எவ்வளவு?
தாக்குதல் நடந்து 3 மாதங்கள் ஆன நிலையில், இதில் தொடர்புடையை ஒருவர் கூட தற்போது வரை கைது செய்யப்படவில்லை. இதில் இரண்டு பாகிஸ்தானியர்கள் மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது புகைப்படங்களும் வெளியிடப்பட்டும் கூட ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. விசாரணை எதுவரை சென்றுள்ளது? எத்தனை பேருக்கு இதில் தொடர்பு உள்ளது? தாக்குதல் எப்படி திட்டமிடப்பட்டது? என்பது தொடர்பான எந்தவித தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.
இந்த மோசமான தாக்குதல் நடந்த பிறகும் கூட உளவுத்துறையின் தலைவர் தபன் குமார் தேகாவின் பதவிக்காலத்தை மத்திய அரசு மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்தது, எதிர்க்கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூரின் போது சில விமானங்களை இந்தியா இழந்ததாக ராணுவ அதிகாரிகளே தெரிவித்துள்ளனர். அதில் ரஃபேல் விமானமும் அடங்குமா? என்பதே தற்போது பிரதான கேள்வியாக உள்ளது. அரசியல் தலைவர்களில் அறிவுறுத்தல் காரணமாகவே சில இழப்புகளை சந்தித்ததகாவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்று, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிப்பாரா? என்பதே பலரின் எதிர்பாப்பாக உள்ளது. அதேநேரம், பிரதமர் மோடி பங்கேற்றாலும் கேள்விகளுக்கு பதிலளிக்காமல், நேரு செய்த தவறு என பழைய புராணத்தை தான் மீண்டும் பாடுவார் என்றும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.