கழட்டிவிட்ட பிரதமர் மோடி? கலக்கத்தில் ஓபிஎஸ்! கதறவிட்ட எடப்பாடி
தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடியை எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என போராடிய ஓபிஎஸ்-க்கு ரெட் சிக்னல் வந்துவிட்டதாக சொல்கின்றனர். அதிமுக பாஜக கூட்டணிக்கு பிறகு முதல்முறையாக தமிழ்நாடு வரும் மோடி இபிஎஸ்-ஐ சந்தித்து முக்கிய விஷயங்களை பேசவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
2 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகிறார். தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடியை எல்.முருகன், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். அதிமுக பாஜக கூட்டணி அமைந்த பிறகு பிரதமர் மோடி முதல்முறையாக தமிழ்நாடு வருவதால் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
இன்று பிரதமர் மோடியும் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-ம் நேரில் சந்திக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் கூட்டணி குறித்தும் முக்கிய விஷயங்களை ஆலோசிக்கவிருப்பதாக சொல்கின்றனர். தமிழக பிரச்னைகள் தொடர்பான கோரிக்கை மனு ஒன்றையும் பிரதமரிடம் கொடுக்க இபிஎஸ் முடிவெடுத்துள்ளதாகவும், சுற்றுப்பயண பிரச்சாரத்தில் இது இபிஎஸ்-க்கு ப்ளஸாக இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
மற்றொரு பக்கம் பிரதமரை சந்திப்பதற்காக தொடர்ந்து போராடி வருகிறார் ஓபிஎஸ். அதிமுகவும், பதவியும் கைகளை விட்டு நழுவிய பிறகு மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார் ஓபிஎஸ். இந்த நேரத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து ரூட்டை மாற்றியது பாஜக. அதிமுக பாஜக கூட்டணியால் என்ன செய்வதென்று தெரியாத நிலைக்கு ஓபிஎஸ் தள்ளப்பட்டுள்ளார். என்ன ஆனாலும் ஓபிஎஸ்-ஐ கட்சிக்குள்ளோ கூட்டணிக்குள்ளோ சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்பதில் விடாப்பிடியாக இருக்கிறார் இபிஎஸ்.
அதனால் பிரதமரையே நேரடியாக சந்தித்து கூட்டணி பற்றி பேசிவிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார் ஓபிஎஸ். இந்த சந்திப்பு நடந்தால் கூட்டணியிலும் தனது இடம் உறுதியாகிவிடும், அதேபோல் தனக்கான செல்வாக்கையும் நிரூபித்துவிடலாம் என கணக்கு போட்டுள்ளார் ஓபிஎஸ்.
ஆனால் பிரதமர் மோடியை சந்திக்கும் நபர்களின் லிஸ்ட்டில் ஓபிஎஸ் பெயர் இல்லை என சொல்கின்றனர். இபிஎஸ், ஓபிஎஸ் 2 பேருமே மோடியை சந்திப்பதற்கு நேரம் கேட்ட நிலையில், இபிஎஸ்-க்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் அப்செட்டில் இருப்பதாக சொல்கின்றனர். பிரதமர் மோடியின் தமிழ்நாடு பயணத்திற்கு பிறகே ஓபிஎஸ் தனிக்கட்சி தொடர்பாக முக்கிய முடிவுகளை அறிவிக்க வாய்ப்பிருப்பதாக பேச்சு அடிபடுகிறது.