Mamata banerjee Nirmala Sitharaman | ”பொய் பேசாதீங்க மம்தா! என்ன நடந்துச்சு தெரியுமா?”நிர்மலா பதிலடி
மம்தா பானர்ஜி சொல்றது பொய், அங்க நடந்தது என்ன தெரியுமா என ஆவேசமாக விளக்கம் கொடுத்துள்ளார் நிர்மலா சீதாராமன்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இதில் நிதி ஒதுக்கியதில் பாரபட்சம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து INDIA கூட்டணியை சேர்ந்த பல முதல்வர்கள் இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தனர். ஆனால் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மட்டும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
ஆனால் இந்த கூட்டத்தில் தான் பேசுவதற்கு உரிய நேரம் கொடுக்கவில்லை என்று நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார் மம்தா. மேலும் தன்னை பேச விடாமல் மைக் அணைக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக எதிர்க்கட்சியினர் சமூக வலைதளங்களில் குரல் கொடுத்தனர்.
இதற்கு PIB fact check unit மறுப்பு தெரிவித்தது. இதுபோல் ஒரு சம்பவம் நடக்கவில்லை என்றும், CLOCK-ல் மேற்குவங்க முதல்வரின் நேரம் முடிந்துவிட்டது என காட்டியது, ஆனால் அவருடைய பேச்சை குறிக்கிடும் வகையில் பெல் கூட அடிக்கப்படவில்லை என்றும் விளக்கம் கொடுத்தனர்.
இந்தநிலையில் மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “நேரம் முடிந்துவிட்டது என்பதை குறிப்பிடும் வகையில், கூட்டத்தை நடத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பென்சில் அல்லது பேனாவால் மைக்கைத் தட்டுவது வழக்கம். ஆனால் அவர்கள் கூடுதம் நேரம் கேட்டால் பேசுவதற்கு எந்த தடையும் இருக்காது. அவர்கள் 10 நிமிடம் வரை கூட கூடுதலாக பேசலாம். அதேமாதிரி மம்தா பானர்ஜி நான் பேச வேண்டும் என சொல்லியிருந்தார் யாரும் தடுத்திருக்க மாட்டார்கள். ஆனால் அவர் அப்படி எதுவும் கேட்காமல் அமர்ந்துவிட்டு, அடுத்த ஒரு நிமிடத்தில் அங்கிருந்து கிளம்பிவிட்டார். ஆனால் செய்தியாளர்களிடம் என்னை பேசவிடவில்லை என சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இது எவ்வளவு பெரிய பொய். அவர் பேச வேண்டியதை பேச வேண்டியதை பேசியிருக்க வேண்டும்” என விமர்சித்துள்ளார்.