Nellai Mayor : ஸ்டாலின் போட்ட ஆர்டர்! கவுன்சிலர் டூ நெல்லை மேயர் யார் இந்த ராமகிருஷ்ணன்?

Continues below advertisement

நெல்லை மாநகராட்சியின் புதிய மேயருக்கான மறைமுக தேர்தலில், திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் நெல்லை மேயர் வேட்பாளர் ராமகிருஷ்ணன் சைக்கிளில் சென்றபடி தனது தாயிடம் ஆசி பெற்றார்.

நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார் ஆளுங்கட்சியான திமுகவில் உள்கட்சி பூசல் காரணமாகவே அவர் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது. இது போன்ற நிலையில் நெல்லை மாநகராட்சியின் புதிய மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராமகிருஷ்ணன் நெல்லை டவுணில் வசிக்கிறார். மிகவும் எளிய பின்னணி கொண்ட இவர் ஐந்து முறை திமுகவில் வட்ட செயலாளராக பதவி வகித்துள்ளார். மேலும் மூன்றாவது முறையாக கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் மிகவும் எளிமையாக மக்களிடம் பழகக் கூடியவராக இருந்து வருகிறார். இவருக்கு சொந்தமாக இருசக்கர வாகனமோ காரோ இல்லை என கூறப்படுகிறது. எனவே நாள்தோறும் காலையில் சைக்கிளில் சென்றபடி தனது வார்டில் மக்கள் நலப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். 

மாநகராட்சி மன்ற கூட்டத்திற்கு செல்வதற்கு வாடகை ஆட்டோவில் செல்வார். இது போன்ற எளிய பின்னணி கொண்ட ராமகிருஷ்ணன் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மேயர் வேட்பாளராக அறிவித்த பிறகும் ராமகிருஷ்ணன் நேற்று சைக்கிளில் சென்றபடி தனது தயாரிடம் ஆசி வாங்கினார்.

நெல்லை மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 வார்டுகளில்,  44 இடங்கள் திமுகவே வசமே உள்ளன. இதனால் தனிப்பெரும்பான்மையுடன் இன்றைய மறைமுக தேர்தலில் திமுக எளிதில் வெற்றி பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோக, கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த 7 மாமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் திமுகவிற்கு உள்ளது. அதிமுக சார்பில் 4 பேர் மட்டுமே நெல்லை மாமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால், மேயர் பதவிகளுக்கு சரியான நபர்களை தேர்ந்தெடுக்க திமுக முனைப்பு காட்டி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram