Mamata Banerjee : பெண் அரசு அதிகாரியிடம் தவறாக நடந்த அமைச்சர்! சாட்டையை சுழற்றிய மம்தா
மேற்குவங்கத்தில் அமைச்சர் ஒருவர், பெண் வனத்துறை அதிகாரியிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, முதலமைச்சர் மம்தா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவர், பெண் வனத்துறை அதிகாரியிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அந்த பெண் அதிகாரியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அமைச்சரிடம் கட்சி மேலிடம் வலியுறுத்தியுள்ளது.
மேற்குவங்கத்தில் சிறைத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் அகில் கிரி. இவர் சர்ச்சை கருத்துகளை தெரிவிப்பது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு குறித்து இவர் தெரிவித்த ஆட்சேபனைக்குரிய கருத்துகள் தேசிய அளவில் சர்ச்சையை கிளப்பின.
பின்னர், இந்த விவகாரத்தில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்கும் அளவுக்கு பிரச்னை சென்றது. இந்த நிலையில், பெண் வனத்துறை அதிகாரி ஒருவரிடம் அமைச்சர் அகில் கிரி தவறாக நடந்து கொண்டுள்ளார். அதோடு, மிரட்டவும் செய்துள்ளார்.
பெண் அதிகாரியை அவர் மிரட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடியாக மாறியது. இதுதொடர்பாக, அமைச்சரிடம் திரிணாமுல் காங்கிரஸ் மாநில தலைவர் சுப்ரதா பக்சி பேசியுள்ளார்.
கொதித்தெழுந்த மம்தா பானர்ஜி: இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் சாந்தனு சென் பேசுகையில், "நேற்று பெண் வனத்துறை அதிகாரியிடம் எங்கள் அமைச்சர் தவறாக நடந்து கொண்டுள்ளார். நாங்கள் அத்தகைய நடத்தையை ஆதரிக்க மாட்டோம் என்று உடனடியாக தெளிவுபடுத்தினோம்.
எங்கள் வனத்துறை அமைச்சர் பிர்பாஹா ஹன்ஸ்தாவும் அந்த அதிகாரியிடம் பேசியுள்ளார். இன்று, கட்சியின் அறிவுறுத்தலின் பேரில், எங்கள் மாநிலத் தலைவர் சுப்ரதா பக்சி, அகில் கிரியுடன் தொலைபேசியில் பேசி, அதிகாரியிடம் மன்னிப்புக் கேட்டு, கட்சிக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்புமாறு உத்தரவிட்டார்.
இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், திரிணாமுல் காங்கிரஸ் ராஜ தர்மத்தைப் பின்பற்றுகிறது என்பதும், திரிணாமுல் காங்கிரஸால் மட்டுமே ஒரு கட்சியாக இத்தகைய நடவடிக்கை எடுக்க முடியும் என்பதும்தான்.
பெண்களுக்கு எதிரான பாஜகவால் இதுபோன்ற நடவடிக்கையை ஒருபோதும் எடுக்க முடியாது. மேலும் கடந்த காலங்களில் பெண்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அத்தகைய ராஜ் தர்மத்தை பின்பற்றியதில்லை" என்றார்.