PM Modi Cabinet | முரண்டு பிடிக்கும் கூட்டணியினர்! தலைவலியில் பாஜக! அமைச்சரவை பூகம்பம்
அமைச்சர்கள் விவகாரத்தில் அஜித் பவாரை தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனாவின் பாஜக மீது ஆத்திரத்தில் இருப்பதால் கூட்டணிக்குள் குழப்பம் எழுந்துள்ளது.
மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். மோடியை தொடர்ந்து 30 கேபினட் அமைச்சர்களும், 5 தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்களும், 36 இணையமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்தநிலையில் அமைச்சரவை விவகாரத்தில் கூட்டணிக்குள் புகைச்சல் வர ஆரம்பித்துள்ளது. அஜித்பவார் தரப்பு தேசியவாத காங்கிரஸுக்கு இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு அதிருப்தி எழுந்தது. எங்களுக்கு கேபினட் அமைச்சர் பதவி வேண்டும் என அஜித்பவார் பாஜகவிடம் விடாப்பிடியாக கேட்டுள்ளார்.
இந்த பிரச்னை அடங்குவதற்குள் அடுத்ததாக ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனா போர்க்கொடி தூக்கியுள்ளனர். 7 எம்.பி.க்கள் வைத்துள்ள தங்கள் கட்சிக்கு ஒரே ஒரு தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவி வழங்கி அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி எம்.பி ஸ்ரீராங் பார்னே தெரிவித்துள்ளார். 2 எம்.பிக்கள் மட்டுமே வைத்துள்ள குமாரசாமிக்கு கேபினட் அமைச்சர் பதவி கொடுத்துவிட்டு எங்களுக்கு மட்டும் இணையமைச்சர் பதவி கொடுக்கலாமா என கொந்தளித்துள்ளனர். அதுவும் கடந்த காலங்களிலும் பாஜகவுடன் சிவசேனா கூட்டணி வைத்துள்ளது என்றும் அதற்காகவாவது கேபினட் அமைச்சர் பதவி கொடுத்திருக்க வேண்டும் என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கூட்டணி விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் பாஜகவுக்கு நிறைய கண்டிஷன் போட்ட நிலையில், தற்போது அமைச்சரவை விவகாரம் பாஜகவுக்கு சிக்கலாக மாறியுள்ளது. ஆட்சியமைத்த உடனேயே அடுத்தடுத்து பிரச்னை எழுந்து வருவது விமர்சனத்தில் சிக்கியுள்ளது. பாஜக இந்த முறை கூட்டணி அமைத்து ஆட்சியமைத்துள்ள நிலையில், கூட்டணி கட்சியினர் முரண்டு பிடிப்பது பாஜகவுக்கு சவாலான ஒன்றாக மாறியுள்ளது.