Chandrababu and Nitish kumar | சபாநாயகருக்கு டார்கெட்! சந்திரபாபு, நிதிஷின் ப்ளான்! பின்னணி என்ன?
மக்களவை சபாநாயகர் பதவிக்காகவே அமைச்சரவையில் முக்கிய இலாகாக்களை, சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் விட்டுக் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவில் தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. கடந்த இரண்டு முறையும் தேர்தல் முடிந்த பிறகு முறையே, 10 மற்றும் 7 நாட்களுக்குப் பிறகே பாஜக ஆட்சி அமைத்தது. ஆனால், இந்த முறை முடிவுகள் வெளியான நான்காவது நாளிலேயே, 72 பேருடன் மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது.
இந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் கிங்மேக்கராக உருவெடுத்தனர். மத்திய தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்ததில் இவர்கள் இருவரின் பங்கு முக்கியமானது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றுள்ள நிலையில் முக்கிய துறைகள் பாஜக வசம் சென்றுள்ளன. சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆகிய இருவருமே செல்வாக்கு மிக்க சபாநாயகர் பதவிக்கே முக்கியத்துவம் கொடுப்பதால் இலாக்காக்களை கண்டுகொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சபாநாயகருக்கு கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மற்றும் தகுதி நீக்கம் தொடர்பான விஷயங்களில் குறிப்பிடத்தக்க அதிகாம் இருக்கிறது. அதற்காகவே மக்களவை சபாநாயகர் பதவிக்கு குறிவைத்துள்ளனர். சமீப காலங்களில் உட்கட்சி பிரச்னைகளால் சில மாநிலங்களில் ஆட்சி கவிழும் நிலை உருவானது. இது பிளவுகளுக்கு வழிவகுத்தது மற்றும் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மற்றும் சரத் பவார் தலைமையிலான என்சிபி பிளவுகள் போன்றவை ஆட்சி கவிழ்ப்பிற்கும் வழிவகுத்தன. இத்தகைய சூழலில், கட்சித் தாவல் தடைச் சட்டம் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது.
அதன்படி, தலைவர் அல்லது அவைத் தலைவரே, உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்வது தொடர்பான வழக்குகளைத் தீர்ப்பதில் முழு அதிகாரம் கொண்டுள்ளார். ஆளும் கட்சி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றிருக்கும் போது, சபாநாயகரின் பங்கு பெரும்பாலும் சம்பிரதாயமாகவே பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், கூட்டணி அரசாங்கங்களில், சபாநாயகரின் அதிகாரம் முக்கியத்துவம் பெறுகிறது. அதனால்தான் அமைச்சரவையை காட்டிலும் மக்களவை சபாநாயகர் பதவிக்கு சந்திரபாபுவும், நிதிஷ் குமாரும் குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.