Senji Masthan Vs DMK : மகன் ,மருமகன் அலப்பறை மஸ்தான் குடும்பம் ALL OUT! அடித்து ஆடும் ஸ்டாலின்

Continues below advertisement

அமைச்சர் செஞ்சி மஸ்தானை திமுக தலைமை, ஓரம்கட்டுவதற்கு, அவரது குடும்ப அரசியலே காரணம் என அறிவாலய வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சில தினங்களுக்கு முன்பு திமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பில், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அந்த பதவியில் சேகர் என்பவர் நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் சொந்த மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதி இடைதேர்தலுக்கான பணிக்குழுவில் கூட அவரது பெயர் இடம்பெறவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் சரியாக பணியாற்றாததே இதற்கு காரணம் என சிலர் கூறுகின்றனர். ஆனால், உண்மையில் மஸ்தான் குடும்பத்தினரின் அரசியல் தலையீடு காரணமாகவே, திமுக தலைமை அவரை திட்டமிட்டு ஒதுக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் மஸ்தானின் மகன் மற்றும் மருமகன் ஆகியோர் அரசியல், அதிகாரத் தலையீடுகள் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. 

 

திண்டிவனம் நகராட்சியை சேர்ந்த 13 கவுன்சிலர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை கடந்த செப்டம்பர் மாதம் திமுக தலைமைக்கு அனுப்பினர். காரணம், "திண்டிவனம் நகர்மன்றத் தலைவராகப் பதவி வகிக்கும் நிர்மலா செயல்படாத தலைவராக இருப்பதாகவும்,  நகராட்சியின் கட்டுப்பாடு அனைத்தும் செஞ்சி மஸ்தானின் மைத்துனர் ரிஸ்வானின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதகாவும்” கூறப்பட்டது.

 

அதனைத்தொடர்ந்து, ரிஸ்வான் வகித்து வந்த விழுப்புரம் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டார். அதோடு, விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார் அலி மஸ்தானும் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இவர் செஞ்சி பேரூராட்சி தலைவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்து.

 

மரக்காணம் கள்ளச்சாராய விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், அந்த வழக்கில் திண்டிவனம் 20-வது வார்டு திமுக கவுன்சிலரின் கணவர் மரூர் ராஜா குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவருக்கு கேக் ஊட்டுவதை போன்று மஸ்தானின் சகோதரர் காஜா நஜீரின் புகைப்படம் வைரலாக, அவர் வகித்து வந்த பேரூர் கழக செயளாளராக இருந்த  பதவியும் பறிக்கப்பட்டது. இதேபோன்று அமைச்சர் மஸ்தானின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்துகொண்டு, தவறான நபர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் திமுக தலைமைக்கு பல்வேறு புகார்கள் பறந்தன. 

 

கடந்த மூன்று ஆண்டுகளாக விழுப்புரம் வடக்கு மாவட்டம் முழுவதும் செஞ்சி மஸ்தானின் குடும்ப ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்தது. இதுதொடர்பாக ஏற்கெனவே ஏராளமான புகார்கள் தலைமையிடம் குவிந்த வண்ணம் இருந்தன. ஆனால்,  இஸ்லாமியரான அமைச்சர் நாசரின் பதவி ஏற்கனவே பறிக்கப்பட்ட நிலையில், நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வஹாப்பின் பதவியும் பறிக்கப்பட்டது.

இந்த சூழலில், தேர்தல் நேரத்தில் செஞ்சி மஸ்தானின் பதவியைப் பறித்தால் சிறுபான்மையினரிடையே தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என திமுக தலைமை கருதியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான்,  நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் சரியாக களப்பணியாற்றவில்லை என கூறி தற்போது அமைச்சர் செஞ்சி மஸ்தானின் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram