இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை!தலையில் பலத்த காயம்! தற்போதைய நிலை என்ன? | La. Ganesan Hospitalized
நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநரான இல.கணேசன் , கீழே விழுந்ததால் தலையில் அடிபட்டிருப்பட்டு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சென்னை அப்பலோ மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாகாலாந்து மாநில ஆளுநராகப் 80 வயது இல.கணேசன் பணியாற்றி வருகிறார். இவர் 2021ஆம் ஆண்டு மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இதன்பின் மேற்கு வங்க ஆளுநர் பொறுப்பையும் சேர்த்துக் கவனித்து வந்தார். பாஜகவில் மாநில தலைவர், தேசிய செயலாளர், தேசிய துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள இல கணேசன், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். தஞ்சாவூரை சேர்ந்த இவர் பாஜகவில் இருந்தாலும், திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுடன் நட்புடன் இருந்தவர். அண்மையில் இல.கணேசன் தனது 80வது பிறந்தநாளினைக் கொண்டாடினார். சதாபிஷேக விழாவில் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பங்கேற்றிருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள வீட்டில் இல.கணேசன் தங்கி ஓய்வெடுத்து வந்தார். இன்று இல.கணேசன் உடல்நலகுறைவு ஏற்பட்டு நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு அப்பலோமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிறப்பு சிகிச்சை அளித்து வருகின்றனர். அண்மையில் இல.கணேசனின் சகோதரர் 83 வயதான இல.கோபாலன் மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போலோ மருத்துவமனை தரப்பில் இல.கணேசனின் உடல்நிலை தொடர்பாக இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. விரைவில் அப்போலோ மருத்துவமனை சார்பாக இல.கணேசன் உடல்நிலை குறித்த அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.