Karnataka Job Reservation : வலுத்த எதிர்ப்புகள்..பின்வாங்கிய சித்தராமையா அதிரும் கர்நாடகா
கர்நாடக வேலை கன்னடர்களுக்கே என்னும் விதமாக, ஒரு புதிய சட்டமசோதாவை கர்நாடக அரசு, கொண்டுவருவாதாக அறிவித்திருந்த நிலையில் இதற்கு பல்வேறு தரப்பினரும், தனியார் நிறுவனங்களும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பின் வாங்கியுள்ளார்.
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஒரு புதிய முயர்ச்சியை கையிலெடுத்தது. அது தான் கன்னட மக்களின் வேலை வாய்ப்பை அதிகப்படுத்தும் வகையில் கர்நாடக தனியார் நிறுவனங்களில், கன்னடர்களையே பணியமர்த்துவதற்கான சட்ட மசோதா. இந்த மசோதாவை பொறுத்த அளவில், தனியார் நிறுவனங்களில் நிர்வாக பொறுப்பில் 50 சதவீதமும், நிர்வாகமற்ற பொறுப்புகளில் 75 சதவீதமும் கன்னடர்களயே பணியமர்த்த வேண்டும், இது தான் அந்த சட்டமசோதாவின் முக்கிய சாராம்சம். இந்த மசோதாவிற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இன்று கர்நாடக சட்டப்பேரவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பலை கர்நாடகாவில் கிளம்பியுள்ளது, பெங்களூரு போன்ற தொழில் நகரங்களில் கன்னடர்களுக்கு சரிசமமாக வெளி மாநிலத்தை சேர்ந்த பணியார்க்ளும் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் பலர் பார்த்து கொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டு கர்நாடகாவிலிருந்து வெளியேறும் சூழல் ஏற்படலாம் என சமூக செயல்பாட்டாளர்கள் விமர்சித்தனர்.மேலும் தொழில்துறை நிறுவனங்களுக்குமே இது சிக்கல் தான் என்பதால் தனியார் நிறுவங்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு 100% வேலை வாய்ப்பு என்று கர்நாடகா அமைச்சரவையில் நிறைவேற்றிய மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக முதலமைச்சர் சித்தராமையா தனது எக்ஸ் வளைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தனியார் துறை நிறுவனங்கள், தொழில்கள் மற்றும் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான வரைவு மசோதா இன்னும் தயாரிப்பு நிலையில் உள்ளது. அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் விரிவான விவாதம் நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும். என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.