Jagan Mohan Reddy vs Chandra Babu Naidu | ஜெகனுக்கு END CARD!அதிரடி காட்டும் சந்திரபாபு..
ஆந்திர அரசியலில் பெரும் திருப்புமுனையாக முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை வீழ்த்தி தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆட்சியை கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் ஜெகன் ஆட்சியில் தான் அனுபவித்த சித்திரவதைகளை அவருக்கு இரண்டு மடங்காக திருப்பி கொடுக்க சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளாராம். அதன்படியே காய்களை நகர்த்தி ஜெகனுக்கு குடைச்சல் மேல் குடைச்சல்களை கொடுத்து அவரது அரசியல் ராஜ்ஜியத்தையே முடக்க நாயுடு முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது..
ஆந்திர சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று சந்திரபாபு நாயுடு முதல்வரான நிலையில், பதவியேற்ற உடனே ஜெகனை பழிதீர்க்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக களமிறங்கிவிட்டதாக ஆந்திர பத்திரிகைகள் முனுமுனுக்க தொடங்கியுள்ளன.. முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வீடு முதல் அவர் கட்டி வந்த கட்சி அலுவலகம் வரை சந்திர பாபு நாயுடு அரசால் புல்டோசரால் சுக்குநூறாக நொறுக்கப்பட்டதே இதற்கு சாட்சியாக கருதப்படுகிறது. சந்திரபாபுவின் இந்த அதிரடி நடவடிக்கைகள் தெலுங்கு தேச கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.. இதன் மூலம் ஜெகனுக்கு பேட் டைம் ஸ்டார்ட் என்பதை உணர்த்துகிறாரா நாயுடு என்ற விமர்சனங்களும் வரத் தொடங்கியுள்ளன.
ஆந்திராவில் தேர்தல் முடிவுகள் வெளியான சில மணி நேரங்களிலேயே தெலுங்கு தேச கட்சியினர் ஜெகன் மோகன் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களின் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களையும் குறிவைத்து தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவை சற்றே ஓய தொடங்க, அடுத்தடுத்து ஜெகனுக்கு நெருக்கடிகளை கொடுக்க தொடங்கினார் சந்திரபாபு நாயுடு.
ஜெகன் மோகன் ஆட்சியில் செயல்படுத்தபட்ட திட்டங்களை தூர்வாறி ரெய்டு விடுவது முதல் ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக கூறி பல கட்டடங்களை புல்டோசர் வைத்து இடித்து தள்ளி வருகிறது சந்திரபாபு தலைமையிலான ஆந்திர அரசு.
இதில் ஜெகன்மோகன் வீட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் தங்கும் அறையும் இடித்து தள்ளப்பட்டது. மேலும் குண்டூர் மாவட்டம் தடேபலியில் கட்டி முடிக்கப்பட்ட ஜெகன் மோகனின் மத்திய கட்சி அலுவலகத்தையும் இடித்து தள்ளினார் சந்திரபாபு. இந்த நெருக்கடிகளை தாங்க முடியாத ஜெகன், சந்திரபாபு அரசியல் பழி தீர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சமூக வலைதள வாயிலாக கடும் கண்டனம் தெரிவித்தார்.
எனினும் இவை அனைத்திற்கும் தொடக்கப்புள்ளியாக பார்க்கப்படுகிறார் ஜெகன் மோகன் ரெட்டி. சந்திரபாபுவை வீழ்த்தி 2019 ஆம் ஆண்டு ஜெகன் முதல்வராக ஆட்சி அமைத்த உடனேயே சந்திரபாபு ஆட்சியில் முதல்வராக இருந்த போது தங்கியிருந்த குடியிருப்பை ஆற்றங்கரையோரம் இருப்பதாக கூறி இடித்தார். இங்கு தொடங்கியது இந்த அழிக்கும் உத்தி..தொடர்ச்சியாக ஜெகன் ஆட்சியில் சந்திரபாபுவுக்கு பல நெருக்கடிகள் கொடுக்கப்பட்டது. உச்சபச்சமாக சந்திரபாபு சட்டமன்றத்தில் இருந்து அழுதுகொண்டே வெளியேறியது மற்றும் சந்திரபாபு கைது தெலுங்கு தேச கட்சியினரை கொந்தளிக்க செய்தது. ஜெகனின் இந்த நடவடிக்கைகள் ஆந்திர அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது..
இந்நிலையில் தற்போது சந்திரபாபுவும் ஜெகனின் உத்தியை கையில் எடுத்திருப்பது அரசியல் பழிதீர்ப்பே என்கின்ரனர் அரசியல் விமர்சகர்கள். சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டாலும் அதனை அரசு தலையிட்டு இடிப்பதே சரி என்றும், மாறாக ஆட்சிகள் மாற மாற மாறி மாறி இடித்து நொறுக்குவது பழிக்குப்பழி என்று கூறுகின்றனர் .
இப்படியான நிலையில் ஜெகன்மோகன் பெரும் நெருக்கடியில் உள்ளதாகவும், ஏன் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை கூற ஜெகன் பெறமுடியாத சூழலில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ஜெகன் மோகனின் அரசியல் ராஜ்ஜியத்தையே முடக்க சந்திரபாபு முடிவு செய்துவிட்டதாக செய்திகள் வெளியாகி ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.