Hindenburg Adani | ஹிண்டன்பர்க் vs செபி”அடிப்படையே ஆதாரமற்றவை...”அதானி முறைகேடு விவகாரம்
அதானி குழும முறைகேட்டில் செபி தலைவர் மாதபிக்கு பங்கு இருப்பதாக, ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளுக்கு செபி தலைவர் மாதபி மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதானி குழுமம் போலி நிறுவனங்கள் மூலம், வெளிநாடுகளில் இருந்து முதலீடுகள் பெறுவதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டு அறிக்கை வெளியிட்டது. இது பெரும் சர்ச்சையாக வெடித்து நாடாளுமன்றத்தில் பெரும் விவாதமாக வெடித்தது. பங்குச்சந்தைகள் பெரும் இழப்பை சந்தித்தன. அந்த பிரச்னை சற்றே ஓய்ந்திருக்கும் நிலையில், ஹிண்டன்பர்க் நிறுவனம் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அதானி குழும முறைகேட்டிற்குப் பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் தலைவர் மாதபி புச்-க்கு சொந்தமான பங்குகள் இருந்தன. முறைகேட்டில் உடந்த என்பதனாலேயே அதானி முழுமம் மீது செபி தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை” என ஹிண்டர்ன்பர்க் குற்றம்சாட்டியுள்ளது. இதனால், மீண்டும் இந்திய பங்குச்சந்தையில் சர்வு ஏற்படலாம் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே தொற்றிக்கொண்டுள்ளது. இந்தியாவில் கார்ப்பரேட் நிர்வாகத்தை மேற்பார்வையிடும் பணியிலுள்ள ஒழுங்குமுறை அமைப்பின் தலைவரே முறைகேட்டில் ஈடுபடுவதா? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளன.
கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி, மொரீஷியஸ் மற்றும் பெர்முடாவை தளமாகக் கொண்ட கடல்சார் நிறுவனங்களைப் பயன்படுத்தி, மின் உபகரண இறக்குமதியின் அதிகப்படியான விலைப்பட்டியல் மூலம் நிதியைப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதானி குழுமத்துடன் தொடர்புடைய ஷெல் நிறுவனங்களின் சிக்கலான வலை மூலம், நிதி மோசடி செய்யப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியான ஹிண்டன்பர்க் அறிக்கையால், அதானி நிறுவனம் ரூ. 20,000 கோடி ஃபாலோ-ஆன் பொது சலுகையை ரத்து செய்தது
இந்நிலையில், ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து, செபி தலைவர் மாதபி புச் மற்றும் தவல் புச் ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், “எங்களுக்கு எதிராக ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் பின்னணியில், அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் உள்ளீடுகளை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம் என்பதை கூற விரும்புகிறோம். அது எந்த உண்மையும் இல்லாதது. எங்கள் வாழ்க்கை மற்றும் நிதி ஒரு திறந்த புத்தகம். தேவையான அனைத்து வெளிப்பாடுகளும் ஏற்கனவே SEBI க்கு பல ஆண்டுகளாக வழங்கப்பட்டுள்ளன. எந்தவொரு மற்றும் அனைத்து நிதி ஆவணங்களையும் வெளியிடுவதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை” என விளக்கமளித்துள்ளனர்.
இந்நிலையில், புதிய அறிக்கை இந்திய பங்குச்சந்தையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது, நாளை தான் தெரிய வரும்.