Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLL
ஹரியானாவில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜகவை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் முன்னேறியுள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
மத்தியில் 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது போலவே ஹரியானாவிலும் 3வது முறையாக ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என தீவிரம் காட்டியது பாஜக. அதே நேரத்தில் இந்த முறை ஹரியானாவை தங்கள் வசம் ஆக்க வேண்டும் என ஆர்வம் காட்டியது காங்கிரஸ். ஹரியானா தேர்தல் களமும் ஆரம்பம் முதலே காங்கிரஸுக்கு சாதகமாகவே அமைந்தது. மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்த போது அதனை எதிர்த்து போராடியவர்களில் ஹரியானா விவசாயிகளின் பங்கு அதிகம். அதனால் விவசாயிகளின் அதிருப்தி மற்றும் மல்யுத்த வீரர்களின் போராட்டம் ஹரியானா தேர்தலில் பாஜகவுக்கு சறுக்கலாக உள்ளதாக பேசப்பட்டது. காங்கிரஸ் எம்.பியின் தேர்தல் பிரச்சாரமும் விவசாயிகளை சுற்றியே அமைந்தது காங்கிரஸுக்கு ப்ளஸாக அமைந்தது.
90 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ஹரியானாவில் நேற்று தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 65.65% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜகவினருக்கு அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளன. ஹரியானாவில் 50க்கும் மேற்பட்ட இடங்களை காங்கிரஸே வெல்லும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
People’s pulse கருத்துக்கணிப்பின்படி, காங்கிரஸ் 55 இடங்களிலும், பாஜக 26 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. NDTV கருத்துக்கணிப்பின்படி, காங்கிரஸ் 55 இடங்களிலும், பாஜக 25 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Times now கருத்துக்கணிப்பின்படி, காங்கிரஸ் 50-64 இடங்களிலும், பாஜக 22-32 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. India today கருத்துக்கணிப்பின்படி, காங்கிரஸ் 50-58 இடங்களிலும், பாஜக 20-28 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் முடிவு இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில தேர்தல்களுக்கு முன்னோட்டமாக அமையும் என சொல்கின்றனர் அரசியல் நோக்கர்கள். அதனால் இந்த தேர்தல் பாஜக, காங்கிரஸின் பலத்தை நிரூபிக்கும் போட்டியாக இருந்தது. கருத்துக்கணிப்பு முடிவுகளை பொறுத்தவரை காங்கிரஸ் பாஜகவை பின்னுக்கு தள்ளியுள்ளது தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஹரியானா தேர்தலில் எம்.பி ராகுல்காந்தியின் பிரச்சாரம் கள நிலவரத்தையே மாற்றி விட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.