Chennai Councillor Stalin | லஞ்சம் கேட்டாரா கவுன்சிலர்? திமுக தலைமை அதிரடி ஆக்ஷன்! நடந்தது என்ன?
சென்னை கவுன்சிலர் ஸ்டாலின் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக புகார் வந்த நிலையில், திமுக தலைமை அவர் மீது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் 144வது வார்டு வட்ட செயலாளராக இருப்பவர் ஸ்டாலின். அதேபோல் சென்னை மாநகராட்சியில் கவுன்சிலராகவும் உள்ளார். சென்னை மாநகராட்சி மதுரவாயல் விஜிபி அமுதா நகர் கூவம் அருகே சென்னை குடிநீர் வடிகால் வாரியம் சாபில் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. 56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வரும் இந்தப் பணியை தனியார் நிறுவன ஒப்பந்ததாரர் நாகராஜன் என்பவர் எடுத்து நடத்தி வருகிறார்.
திமுக கவுன்சிலர் ஸ்டாலின் 10 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. தன்னை மீறி எந்த பணியும் நடக்கக் கூடாது என தடுத்து நிறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக குடிநீர் வாரிய செயற்பொறியாளர் மற்றும் தனியார் நிறுவன ஒப்பந்ததாரரும் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், பணம் கேட்டு மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தநிலையில் கவுன்சிலர் ஸ்டாலின் மீது திமுக தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்ட காரணத்திற்காக கவுன்சிலர் ஸ்டாலினை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.