
H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education Policy
மும்மொழி கொள்கை விவகாரத்தில் பாஜகவை விஜய் நேரடியாக அட்டாக் செய்த நிலையில், ஆலமரம் பள்ளிக்கூடம் ஆக்ஸ்ஃபோர்டா மாற வேணாமா? உங்க பையனுக்கு மட்டும் ஒரு நியாயமா என கொந்தளித்துள்ளார் ஹெச்.ராஜா.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ் நாட்டிற்கு தேவையான கல்வி நிதியை வழங்க வேண்டும் என்றால் நாங்கள் கொண்டு வரும் புதிய தேசிய கல்விக்கொள்கையை ஏற்க வேண்டும் என்று பேசியதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு குரல் எழுந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது" என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்!
எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்... “ என்று தன்னுடைய கண்டனத்தை கடுமையாக பதிவு செய்தார். அதேபோல், தவெக தலைவர் விஜயும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிட்டார்.
அதில்,”மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன ? மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பது ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே. ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்.”என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விஜயை கடுமையாக தாக்கி எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நடிகரும் தவெக தலைவருமான விஜய் வேட்டைக்காரன் என்கிற ஒரு திரைப்படத்தின் முதல் பாடலில் தனது மகன் ஜேஸன் சஞ்சயோடு நடனமாடி இருப்பார். அந்த பாடலில் பள்ளிச் சிறுவர்கள் கூட்டத்தின் மத்தியில் நின்று ...
"ஆலமர பள்ளிக்கூடம் ஆக்ஸ்போர்டா மாறனும். நீ தாய்மொழியில் கல்வி கற்று தமிழ்நாட்டை உயர்த்தனும்" என்று பாடுவார். தமிழக மாணவர்கள் தாய்மொழியில் கல்வி கற்று தமிழ்நாட்டை உயர்த்தனும் என்று தன் மகனோடு நடனமாடி பாடிய அவர்தான்... தன் மகன் ஜேஸன் சஞ்சய் தமிழ்வழி சமச்சீர் பள்ளியில் சேர்க்காமல் மும்மொழி கல்வி போதிக்கும் சென்னை "அமெரிக்கன் இன்டர்நேஷனல் ஸ்கூலில்" சேர்த்து படிக்க வைத்திருக்கிறார்.
ஆலமர பள்ளிக்கூடம் ஆக்ஸ்போர்டா மாறனும் என்று பாடி இருக்கிறாரே தவெக தலைவர் விஜய் அவர்கள்... அவர் விருப்பபடி அரசு பள்ளிகள் எல்லாம் ஆக்ஸ்போர்ட் போல அவருடைய மகன் தஜேஸன் சஞ்சய் பயின்ற அமெரிக்கன் இன்டர்நேஷனல் ஸ்கூல் போல கல்வித் தரத்தில் உயர வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தோடு தான் புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
அதை புரிந்து கொள்ளாமல் அவர் மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பது ஏன் என தெரியவில்லை. அவர் மகனை மும்மொழி கல்வி போதிக்கும் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்துவிட்டு அவருடைய ரசிகர்கள் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் தமிழக குழந்தைகள் அனைவருக்கும் அதே தரத்திலான மும்மொழி கல்வியை மத்திய அரசு வழங்குவதற்கு அவர் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக இருக்கிறது.”என்று கூறியுள்ளார். அதேபோல், திமுக அமைச்சர்களின் மகன்களும் மும்மொழி கல்வியை கடைபிடிக்கும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயில்வது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.