NTK Krishnagiri Issue | மாணவியிடம் அத்துமீறல் சிக்கிய நாதக நிர்வாகி போலீஸ் அதிரடி
பள்ளி மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி உட்பட 9 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் நாம் தமிழர் கட்சி வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் கடந்த 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை என்சிசி மாணவிகளுக்கு பயிற்சி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமில், 17 மாணவிகள் பள்ளியிலே தங்கி பயிற்சி பெற்றனர். இதில் 13 வயது எட்டாம் வகுப்பு மாணவி பள்ளியின் வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் சக மாணவிகளுடன் உறங்கியதாக கூறப்படுகிறது.
அப்போது என்சிசி பயிற்சியாளரும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியாகியுமான சிவராமன் எட்டாம் தேதி அதிகாலை 3 மணி அளவில் 13 வயது எட்டாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தனக்கு நடந்த கொடுமையை குறித்து பள்ளி முதல்வரிடம் பாதிக்கப்பட்ட மாணவி புகார் தெரிவித்த போதும், அதனை பெரிதுப்படுத்த வேண்டாம் என அவர் அலட்சியமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி மாணவியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மாணவியின் பெற்றோர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் மாணவியை அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் நேர்ந்துள்ளது என்பதை கண்டுபிடித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர்கள். உடனடியாக இந்த சம்பவம் குறித்து பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் என்சிசி பயிற்சியாளர் சிவராமன் மற்றும் பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார், தாளாளர் வெஸ்லி உட்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவான முக்கிய குற்றவாளியான சிவராமன் மற்றும் சுதாகரை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இதனிடையே இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக இருந்த சிவராமன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து தலைமறைவாக இருந்த சிவராமனை போலீசார் 4 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில் கோவையில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.
அப்போது சிவராமன் போலீசாரிடமிருந்து தப்ப முயன்றபோது தடுமாறி விழுந்ததால் அவரது வலது காலில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தற்போது நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன், பள்ளியின் முதல்வர் சதீஷ் குமார், தாளாளர், பயிற்சியாளர் உள்ளிட்ட 8 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.