
Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்
ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கு செக் வைக்கும் வகையில், ராஜ்ய சபா சீட்டை தென் மாவட்டத்திற்கு ஒதுக்கி அந்த ஏரியாவை கண்ட்ரோலில் கொண்டு வர ப்ளான் போட்டுள்ளார் இபிஎஸ். அதிலும் குறிப்பாக முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு சீட் கொடுக்க கணக்கு போட்டுள்ளதன் பின்னணியில் சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சூழலில், அதற்கு முன்பாகவே மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுகவிடம் இருக்கும் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் ஒன்றை பாமக அல்லது தேமுதிகவிற்கு எடப்பாடி பழனிசாமி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், இன்னொரு சீட்டை இபிஎஸ் யாருக்கு வழங்குவார் என்ற கேள்வி எழுந்த நிலையில்,தென் மாவட்டத்தில் உள்ள முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு இபிஎஸ் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது அவர் முதலமைச்சராக இருந்த சமயத்தில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்ததால் முக்குலத்தோர் சமுதாயத்தின் ஏகோபித்த எதிர்ப்பைச் சம்பாதித் இபிஎஸ் அதற்கு பிராய்சித்தமாக தான் அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது இபிஎஸ் அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றாலும் அவருக்கு கொங்கு மண்டலத்தில் இருக்கும் பலம் தென் மாவட்டங்களில் இல்லை. சமூக ரீதியாக முக்குலத்தோர் சமூகத்திற்கான தலைவர் இபிஎஸ் இல்லை நாங்கள் தான் என்று ஓபிஎஸ் - டிடிவி தினகரன் தென் மாவட்டங்களில் அரசியல் செய்து வருகின்றனர். அதனால் தான் ஓபிஎஸ் சுயேட்சையாக இராமநாதபுரம் தொகுதியில் நின்று இரண்டாம் இடம் பிடித்தார். முக்குலத்து சமூகத்திற்கான பிரதிநிதிதுவத்தை ஜெயலாலிதா கொடுத்த அளவிற்கு இபிஎஸ் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.
இதனிடையே தான் தேனியில் ஒரு பிரமாண்ட கூட்டத்தை நடத்தி இனி தென் மாவட்டத்தில் அதிமுகவில் அணிகள் எல்லாம் இல்லை ஒரே அணி அது நான் தான் என்பது போன்று பேசினார் எடப்பாடி. இச்சூழலில் தான் தென் மாவட்ட முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை வழங்க எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இபிஎஸ்-ன் முதல் சாய்ஸாக இருப்பது அதிமுக மருத்துவ அணி மாநில இணைச்செயலாளர் டாக்டர் சரவணன் தான் என்று சொல்கின்றனர் அதிமுக தென் மாவட்ட நிர்வாகிகள். அதிமுக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு டாக்டர் சரவணன் தோல்வி அடைந்தார். ஆனால் அவர் களத்தில் இறங்கி செய்த வேலைகள் அக்கட்சி நிர்வாகிகளுக்கே ஆச்சரியமாக இருந்ததாக சொல்லப்பட்டது.
இச்சூழலில் தான் அவருக்கு எம்.பி சீட் வழங்கினால் அது தென் மாவாட்டத்தில் தனக்கான செல்வாக்காக மாறும் என்று இபிஎஸ் கணக்கு போட்டுள்ளாதக கூறப்படுகிறது.இதன் மூலம் கொங்கு மண்டலத்தை எப்படி தன்னுடைய முழு கட்டுப்பாட்டிற்குள் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்தாரோ அதே போல் தென் மாவட்டங்களையும் தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்து ஓபிஎஸ்-ன் அரசியல் எதிர்காலத்திற்கு இபிஎஸ் முற்றுப்புள்ளி வைப்பார் என்று சொல்கின்றனர் இபிஎஸ் ஆதரவாளர்கள்.