
ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!
மதுபான ஆலைகள் மற்றும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை அடிப்படையில், “டாஸ்மாக்கில் 1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளதாகவும், பல்வேறு தனியார் நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை கூறியுள்ள நிலையில் இது செந்தில்பாலாஜிக்கு வைக்கப்பட்ட குறி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
டாஸ்மாக் மதுபான முறைகேடு தொடர்பாக கடந்த சில நாட்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், தனியார் மதுபான ஆலைகள் உட்பட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில், டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகளில் நடந்த சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது. மதுபான கொள்முதல் மூலம் தனியார் நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அமலாக்கத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
திட்டமிட்டு செலவுகளை அதிகப்படுத்தியும் விற்பனை புள்ளிவிவரங்களை உயர்த்தியும் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. டாஸ்மாக்கில் மது பாட்டில்களை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து டெண்டர் மதிப்பு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய். இதில் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அதேபோல, பார் லைசென்ஸ் டெண்டர்களிலும் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
ஜி.எஸ்.டி., பான் கார்டு இல்லாத விண்ணப்பதாரர்களுக்கும் டெண்டர் தரப்பட்டுள்ளது அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
எஸ்.என்.ஜே., கல்ஸ், அக்கார்டு, சைப்ல், ஷிவா டிஸ்டிலரி ஆகிய மது உற்பத்தி ஆலைகள், தேவி பாட்டில்ஸ் கிறிஸ்டல் பாட்டில்ஸ். ஜி.எஸ்.ஆர். ஹோல்டிங் ஆகிய பாட்டிலிங் நிறுவனங்களிலும் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம், எந்த அரசு கணக்கிலும் சேராமல் 1000 கோடி ரூபாய் அபகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாடுகள் நிலுவையில் உள்ளன. இதுதொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், டாஸ்மாக்கில் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை தெரிவித்திருப்பது செந்தில் பாலாஜிக்கு புதிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது.