Mayors Resign | ஆட்டம் காட்டிய மேயர்கள்..அடக்கி ஆளும் ஸ்டாலின்!களையெடுப்பு ஆரம்பமா?

Continues below advertisement

ஒரே நாளில் கோவை மற்றும் நெல்லை மேயர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்..திமுக தலைமையின் கடுமையான அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக திமுகவில் உள்கட்சி மோதல்கள் உச்சத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அது நிரூபணமாகிவிட்டதாக கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள். இந்நிலையில் இதன் பின்னணி என்ன? திமுகவில் என்ன தான் நடக்கிறது? என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

நேற்று கோவை மேயர்  கல்பனா ஆனந்தகுமார் மற்றும் நெல்லை மேயர் பி.எம்.சரவணன் ஆகியோர் தங்களது மேயர் பதவியை ராஜினாமா செய்தனர்.

கோவையை பொறுத்தவரை, செந்தில் பாலாஜியின் தீவிர ஆதரவாளரான கல்பனா ஆனந்தகுமார் மேயராக பொறுப்பேற்ற பின்னர், அவரது செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என புகார்கள் வந்தன. அதேபோல தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் அவர்சிக்கி வந்தார். 

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறை சென்ற போது, சில ஆவணங்களை கல்பனாவின் தம்பி குமார் எரித்தாகவும் புகார் எழுந்தது. பல்வேறு இடங்களில் கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார் பணம் கேட்டதாகவும், ஒப்பந்ததாரர்களிடம் மேயர் கல்பனா கமிசன் கேட்டதாகவும் என ஊழல் புகார்களும் வந்தன. மேலும் கல்பனாவுக்கும், கே.என். நேருவிற்கும் இடையே மோதல்கள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

அதேபோல திமுக கவுன்சிலர்களை அரவணைத்து செல்லாததே, கவுன்சிலர்கள் மேயர் கல்பனா மீது அதிருப்தி மனநிலைக்கு செல்ல காரணம் என கூறப்படுகிறது. மாநகராட்சி மண்டலத்தில் இருந்து அனுப்பப்படும் கோப்புகள் அனைத்தையும் மேயர் கல்பனா  உள்நோக்கத்துடன் நிறுத்தி வைப்பதாகவும், தனிபட்ட வன்மத்துடன் மேயர் கல்பனா செயல்படுவதாகவும் மத்திய மண்டல தலைவர் மீனாலோகு குற்றம்சாட்டினார். இதனால் கோவை மாநகராட்சி மேயரை மாற்ற வேண்டுமென திமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து புகார்கள் அளித்து வந்தனர். கடந்த சில நாட்களாகவே கல்பனா ஆனந்தகுமாரிடம் கட்சி தலைமை ராஜினாமா கடிதம் வாங்கியதகவும், அவர் பதவி விலக உள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தன. இந்த நிலையில் நேற்று கல்பனா ஆனந்தகுமார் தனது ராஜினாமா கடிதத்தை கோவை மாநகராட்சி அணையர் சிவகுருவிடம் வழங்கினார்.

அதேபோல் நெல்லையிலும், கடந்த 2022 இல் இருந்தே திமுகவில் உள்கட்சி பூசல் உச்சத்தில் உள்ளது. நெல்லை மேயராக இருந்த சரவணன் மீதும் திமுகவினர் மத்தியிலேயே அதிருப்தி காணப்பட்டது. 2023 டிசம்பரில் திமுக கவுன்சிலர்கள் தங்கள் சொந்த மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், கடந்த ஜனவரி 12ம் தேதி எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களும் தீர்மானத்தை புறக்கணித்ததால் அது தோல்வியடைந்தது.ஆனால் மேயர் மீதான அதிருப்தி ஓய்ந்த பாடில்லை. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு வார்டு 7 கவுன்சிலர், மேயர் மீதான அதிருப்தி காரணமாக பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் நேற்று மேயர் சரவணனும் ராஜினாமா கடிதத்தை வழங்கி பதவி விலகியுள்ளார்.

இந்நிலையில் கட்சித் தலைமையின் கடுமையான அறிவுறுத்தலின் பேரிலே மேயர் கல்பனாவும், சரவணனும் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சியின் உட்கட்சி பூசல் உச்சத்தில் உள்ள மாவட்டங்களில், அதனை சரி செய்யும் நடவடிக்கையில் கட்சித்தலைமை இறங்கியுள்ளதாக திமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்த டிசம்பரில் வரும் உள்ளாட்சி தேர்தலுக்குள் இவை அனைத்தையும் சரி கட்ட வேண்டிய கட்டாயத்தில் கட்சி தலைமை உள்ளதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே இந்த அதிரடி ஆக்சன் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்!

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram