Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவி
பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம் அமைத்து கொள்ள நீதிபதி யோசனை தெரிவித்த நிலையில், சென்னை செங்குன்றம் பொத்தூர் பகுதியில் உடலை அடக்கம் செய்ய ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி ஒப்புதல் தெரிவித்தார்.
பகுஜன் சமாஜ் அலுவலகம் உள்ள இடத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்தது. குடியிருப்பு நிலத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய எப்படி அனுமதிக்க முடியும் எனக் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், முதலில் அரசு கூறும் இடத்தில் அடக்கம் செய்த பின், வேறு இடத்துக்கு மாற்றலாம். புதிய இடத்தில் அடக்கம் செய்வதற்கான, மணி மண்டபம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
அவரது மனைவி பொற்கொடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பெரம்பூரில் உறவினருக்கு சொந்தமான 7,500 சதுர அடி நிலம் உள்ளது. அதில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கேட்டார். அதற்கு நீதிபதி, இந்த இடத்தில் அடக்கம் செய்வது தொடர்பாக அரசிடம் தான் புதிதாக மனு அளிக்க வேண்டும், குடும்ப உறுப்பினர் நிலத்தை உங்கள் பெயருக்கு மாற்ற வேண்டும். அதுவரை உடலை பள்ளியிலேயே வைத்திருக்க முடியாது. நாளை பள்ளி திறக்கப்பட வேண்டும். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி உடல் முன் அமர்ந்து எப்போதும் அழுது கொண்டிருக்க முடியாது. இந்த துயரத்தில் இருந்து அவர் மீண்டும் வர வேண்டும் என்று தெரிவித்தார்.
ஆம்ஸ்ட்ராங் உடலை கண்ணியத்துடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். இந்த நிலையில், சென்னை செங்குன்றம் பொத்தூர் பகுதியில் உடலை அடக்கம் செய்ய ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி ஒப்புதல் தெரிவித்துள்ளார். மேலும் பெரம்பூர் கட்சி அலுவலகத்தில் அரசு அனுமதி பெற்று நினைவிடம் அமைத்து கொள்ளலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.