Annamalai bjp meeting : ANTI-அண்ணாமலை GANG... பாஜகவில் விரிசல்? கமலாலயம் EXCLUSIVE
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் முடிந்த பிறகு நடந்த பாஜக முதல் கூட்டத்திலேயே கட்சியின் முக்கிய புள்ளிகளாக இருக்கக் கூடிய பொன் ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் கலந்து கொள்ளாதது விவாதத்தில் சிக்கியுள்ளது. பாஜகவில் அண்ணாமலைக்கு எதிரான அலை உருவாகியுள்ளதா என்று சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்காக பம்பரமாக சுழன்று வந்த அரசியல் கட்சியினர் தேர்தல் முடிந்ததும் சில நாட்கள் சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டனர். தற்போது மீண்டும் ஆலோசனை கூட்டங்கள் நடத்துவது என அடுத்தகட்ட வேலைகளில் இறங்கிவிட்டன. அந்தவகையில் கடந்த 27ம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எல்.முருகன், தமிழிசை சவுந்தரராசன் உள்ளிட்ட முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர். ஆனால் பொன் ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் கலந்து கொள்ளாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
மக்களவை தேர்தல் நெருங்கிய சமயத்தில் நயினார் நாகேந்திரன் 4 கோடி ரூபாய் பண பறிமுதல் விவகாரத்தில் சிக்கினார். சென்னையிலிருந்து நெல்லை சென்ற ரயிலில் பணம் கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டதில் பணம் சிக்கியது. தனக்கும் அந்தப் பணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மறுத்தார் நயினார். இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணைக்காக சம்மன் அனுப்பியுள்ளனர்.
நயினார் நாகேந்திரனை மாட்டி விட்டதன் பின்னணியில் அண்ணாமலை இருப்பதாக சந்தேகம் இருப்பதாக புலனாய்வு செய்திகளும் வெளிவந்தன. இந்த விவகாரத்தில் நயினாரும் அண்ணாமலை மீது கோபத்தில் இருப்பதாக கமலாலய வட்டாரத்தில் கூறப்படுகிறது. இப்படி ஒரு பனிப்போர் போய் கொண்டிருக்கும் நேரத்தில், நயினார் பாஜக கூட்டத்தில் கலந்து கொள்ளாதது சந்தேகத்தை வலுப்படுத்துவதாக இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.
மற்றொரு பக்கம் கட்சியின் சீனியர்களை அண்ணாமலை ஓரங்கட்டுவதாக பொன் ராதாகிருஷ்ணன் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அண்ணாமலையால் தங்களுக்கான முக்கியத்துவம் குறைந்து விட்டதாக பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் கடுப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது. நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலையும், மேடையில் இருப்பவர்கள் கீழே வரலாம், கீழே இருப்பவர்கள் மேடைக்கு வரலாம் என பேசியுள்ளார். மேடையில் இணையமைச்சர் எல்.முருகனும் அமர்ந்திருந்த நிலையில் அண்ணாமலையின் பேச்சு எல்.முருகன் ஆதரவாளர்களுக்கு ஆத்திரத்தை கொடுத்துள்ளது.
மற்றொரு பக்கம் நயினார், பொன் ராதாகிருஷ்ணன், வானதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. தேர்தல் நேரத்தில் எந்த கோபத்தையும் காட்டாமல் சைலண்ட் மோடில் இருந்துவிட்டு தேர்தல் முடிந்ததும் கூட்டத்துக்கு வராமல் தங்களது எதிர்ப்பை காட்டுகிறார்களா என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. தேர்தல் முடிந்ததும் அண்ணாமலைக்கு எதிரான அலை வீச தொடங்கியுள்ளதாக என விவாதமாக மாறியுள்ளது.