Chandrababu Naidu as CM? | மீண்டும் அரியணையில் சந்திரபாபு? கலக்கத்தில் ஜெகன் மோகன்! அரசியலில் TWIST
ஆந்திரபிரதேசத்தில் 16 தொகுதிகளில் முன்னிலை வகித்து கிங்மேக்கராக உருவாகியுள்ளார் சந்திரபாபு நாயுடு. பாஜக தனிப்பெரும்பான்மையை பெறத் தவறினால், கூட்டணியில் உள்ள சந்திரபாபு என்ன முடிவெடுக்கப் போகிறார், ஆட்சியமைக்கப் போவது யார் என்பதில் அதிரடி திருப்பம் இருக்குமா என எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
25 மக்களவை தொகுதிகளை கொண்ட ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஜனசேனா கட்சியுடன் கைகோர்த்தது பாஜக. ஆந்திரபிரதேசத்தில் வலுவான கூட்டணி அமைத்தது பாஜக. ஆந்திரபிரதேச சட்டசபை தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் சரித்திரம் படைத்துள்ளார் சந்திரபாபு நாயுடு. ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸை பின்னுக்கு தள்ளி 130க்கும் தெலுங்கு தேசம் கட்சி அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியில் அமரும் சூழல் உருவாகியுள்ளது.
மற்றொரு பக்கம் மக்களவை தேர்தலிலும் அதிரடி காட்டியுள்ளார் சந்திரபாபு நாயுடு. 16 மக்களவை தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது தெலுங்கு தேசம். பாஜக 3 தொகுதிகளிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. மொத்தமாக ஆந்திராவில் இந்த கூட்டணி 21 தொகுதிகளில் முன்னேறி வருகிறது.
16 மக்களவை தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலையில் இருப்பதால் சந்திரபாபு நாயுடுவும் கிராஃப் எகிறியுள்ளது. பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவில்லையென்றால், கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு மவுசு அதிகரிக்கும். ஒருவேளை அவர் கூட்டணியில் இருந்து வெளியேற முடிவெடுத்தால் ஆட்சியமைக்கப் போவது யார் என்பதில் அதிரடி திருப்பங்கள் இருக்கும் என்று பரபரப்பு பேச்சு இருக்கிறது.