Govt School issue : அரசுப் பள்ளியில் ஆன்மீகமா?” கொந்தளிக்கும் கூட்டணியினர்! ஆக்ஷன் எடுத்த அன்பில்
அரசுப் பள்ளிகளில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மிக சொற்பொழிவு நடத்தும் வீடியோ வெளியாகி சர்ச்சையாக வெடித்துள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மட்டுமல்லாமல் கூட்டணி கட்சியினரும் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
தனியார் தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் மகாவிஷ்ணு என்பவர் சென்னை அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் ஆன்மிகம் தொடர்பாக மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார். முந்தைய பிறவியில் செய்ததன் பலனை தான் இந்த பிறவியில் அனுபவிப்போம் என்றெல்லாம் மாணவர்கள் மத்தியில் பேசியது அதிருப்தியை ஏற்படுத்தியது. அறிவியல்பூர்வமற்ற சிந்தனைகளை பேசியதற்கு எதிராக ஆசிரியர் ஒருவர் அங்கு வைத்தே அவரிடம் வாக்குவாதம் செய்த காட்சிகளும் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு எதிராக சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது. இந்தநிலையில் சர்ச்சைக்குரிய வகையில் சொற்பொழிவாளர் பேசியது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் விளக்கம் அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதற்கு எதிராக கூட்டணி கட்சியினரும் விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளனர். அரசுப் பள்ளியில் வைத்து ஒருவர் முட்டாள்தனமாக பேசுவதை பார்த்தால் வேதனையாக இருக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் அமைச்சர் அன்பில் மகேஷை டேக் செய்து கருத்து தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே முத்தமிழ் முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ழாக் காலங்களில் அருள்மிகு கந்தசஷ்டி முருகன் திருக்கோயில்களில் மாணவ, மாணவியர்களைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது என்று முடிவெடுக்கப்பட்டது சர்ச்சையில் சிக்கியது. இந்த தீர்மானங்கள் கல்வியை காவிமயமாக்கும் வகையில் இருப்பதாக விசிக எம்.பி ரவிக்குமார் விமர்சித்திருந்தார்.
இப்படி பள்ளிக்கல்வித்துறையை சுற்றி அடுத்தடுத்து விமர்சனங்கள் வர ஆரம்பித்துள்ளன. கூட்டணி கட்சியினரே குற்றச்சாட்டை முன்வைப்பது விவாதமாக மாறியுள்ளது.