Amitshah slams Rahul gandhi : ”இவ்ளோ ஆணவமா ராகுல்? ஏன் இப்படி பேசுறீங்க” ஆவேசமான அமித்ஷா
எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் பாஜகவினரை நோக்கி ஆவேசமாக பேசியதை குறிப்பிட்டு, ராகுல்காந்திக்கு ஏன் இவ்வளவு ஆணவம் என கடுமையாக விமர்சித்துள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.
மக்களவை தேர்தலில் பாஜக தனியாக 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளது. எதிர்க்கட்சி தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்றார். சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பாஜகவினரை நோக்கி சரமாரியான கேள்விகளை எழுப்பினார் ராகுல்காந்தி. இந்துக்கள் என்று தங்களை சொல்லிகொள்பவர்கள், வெறும் வெறுப்பு, வன்முறை, உண்மைக்கு புறம்பானவற்றை மட்டுமே பேசுவதாகவும், பாஜக மட்டுமே இந்துக்கள் கிடையாது என்றும் ஆவேசமாக பேசினார். மேலும் மணிப்பூர் விவகாரம், நீட் விவகாரம், அக்னிவீர் திட்டம் தொடர்பாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி கவனம் ஈர்த்தனர். ராகுல்காந்தி எதிர்க்கட்சியினரை தூண்டிவிடுவதாக பாஜகவினர் குற்றம்சாட்டினர்.
இந்தநிலையில் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொண்ட அமித்ஷா இந்த சம்பவத்தை குறிப்பிட்டு பேசினார். தேர்தலில் தோல்வியடைந்து விட்டு ராகுல்காந்திக்கு ஏன் இவ்வளவு ஆணவம் என விமர்சித்துள்ளார். மேலும் பேசிய அவர், ‘இப்படி ஒரு ஆணவத்தை மக்கள் பார்த்திருக்க மாட்டார்கள். நானும் இதுமாதிரி ஒரு சம்பவத்தை முதல்முறையாக இப்போதுதான் பார்க்கிறேன். இந்தியா கூட்டணியை விட பாஜக தனியாகவே அதிக இடங்களில் வென்றுள்ளது என அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
நாடு முழுவதும் நடந்த இடைத்தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்த நிலையில், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஹரியானா சட்டசபை தேர்தலை குறிவைத்து தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. அந்தவகையில் அமைச்சர் அமித்ஷா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக அடுக்கடுக்கான விமர்சனங்களை வைத்து வருகிறார். தற்போது பட்ஜெட் கூட்டத்தொடரும் தொடங்கியுள்ள நிலையில், இனிவரும் நாட்களில் நாடாளுமன்றத்திலும் காரசாரமான விவாதம் இருக்கும் என்றும், சட்டசபை தேர்தல்களில் அதன் தாக்கம் இருக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.