மோதும் அண்ணாமலை நயினார்! களத்தில் இறங்கும் அமித்ஷா! பரபரக்கும் கமலாலயம்

பாஜக மாநில தலைவர் விவகாரத்தில் அண்ணாமலையும், நயினார் நாகேந்திரனும் மோதிக் கொண்டிருக்கும் நேரத்தில், அமித்ஷா சென்னைக்கு வருவது இதெற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. முக்கியமான முடிவு ஒன்று இன்று எடுக்கப்படவுள்ளதாக தமிழக பாஜக வட்டாத்தில் சொல்கின்றனர்.

தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவர் யார் என்று இன்னும் பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே இருக்கிறது. அண்ணாமலையே மீண்டும் தலைவராவதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளது. ஆனால் அதற்கு பாஜக சீனியர்களே முட்டுக்கட்டை போட்டு வருவதுதான் சிக்கலாக உருவெடுத்துள்ளது. தலைவர் ரேசில் தங்களது சோர்ஸை வைத்து நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் டெல்லி பாஜவிற்கு குடைச்சல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக பாஜகாவின் தென் மாவட்ட முகமான நயினார் நாகேந்திரன் இந்த முறை எப்படியாவது பாஜக தலைவராக வேண்டும் என்று முனைப்பில் காய் நகர்த்துகிறார். அதிமுகவில் அவர் பயணித்ததை வைத்து என்னை தலைவராக்கினால் அதிமுக கூட்டணி சாத்தியமாகும் என தனது லாபிகளை வைத்து டெல்லி தலைமை காதுகளுக்கு கொண்டு சென்றுள்ளார்.

அதனால் தமிழக பாஜகவில் 2 தரப்புகளாக பிரிந்து பனிப்போர் நடந்து வருகிறது. கட்சியினரின் நடவடிக்கைகளும் அது வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்துள்ளது. வானதி சீனிவாசன் கட்சி தொடர்பான பதிவுகளில் அண்ணாமலை பெயரையே தவிர்த்து வருகிறார். அதேபோல் அதிமுகவுக்கு ரெய்டு மூலம் நெருக்கடி கொடுக்க வேண்டிய தேவை பாஜகவுக்கு இல்லை. இபிஎஸ் உடன் நேரடியாக பேசினாலே கூட்டணி வந்துவிடும் என நயினார் நாகேந்திரன் சமீபத்தில் பேசியிருந்தார். இதுதொடர்பாக அண்ணாமலையிடம் கேட்ட போது ரெய்டு விடுவதற்கெல்லாம் நயினார் நாகேந்திரன் அண்ணனுக்கு எந்த அதிகாரமும் இல்லை நேரடியாகவே அட்டாக் செய்தார் அண்ணாமலை.

இப்படி பிரச்னை முற்றும் நேரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னைக்கு வருகிறார். முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பேரன் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வருகிறார். அப்படியே தலைவர் பதவி விவகாரத்தையும் பேசி முடித்துவைத்துவிட முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஒருவருக்கொருவர் குறை சொல்வது, பொது வெளியிலேயே விமர்சனங்களை வைப்பது பாஜக தலைமைக்கு கோபத்தை கொடுத்துள்ளதாகவும், அமித்ஷா அதுபற்றி கண்டிக்கவிருப்பதாகவும் சொல்கின்றனர். தலைவர் பதவி தொடர்பான பேச்சுவார்த்தையையும் முடிவுக்கு கொண்டு வரவிருப்பதாகவும், அமித்ஷாவின் சென்னை வருகைக்கு பிறகு சில நாட்களிலேயே தலைவர் யார் என்பதை அறிவித்துவிடுவார்கள் என்றும் கமலாலய வட்டாரத்தில் சொல்கின்றனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola