
புஸ்ஸான புஸ்ஸி ஆனந்த்! நம்பர் 2 ஆகும் ஆதவ்! விஜய் போட்ட கண்டிஷன்
தவெகவிற்குள் நுழைந்துள்ள முக்கிய புள்ளிகளால் தன்னுடைய நிலை பரிதாபமாக போய்விடுமோ என்ற பயத்தில் இருக்கிறார் புஸ்ஸி ஆனந்த். ஆரம்பத்தில் இருந்தே ஆதவ்-ஐ கட்சிக்குள் வரக்கூடாது என போராடிவந்தும் எதுவும் கைகொடுக்காமல் தற்போது புஸ்ஸி ஆனந்தின் இடத்திற்கே சிக்கலாக மாறியுள்ளது.
விசிகவில் இருந்து வெளியேறிய ஆதவ் அர்ஜூனா, அதிமுகவில் இருந்த சி.டி நிர்மல்குமார் என முக்கிய புள்ளிகளை தவெகவுக்கு தட்டித் தூக்கியுள்ளார் விஜய். கட்சிக்குள் வரும் போதே நிர்மல் குமாருக்கு துணை பொதுச்செயலாளர், ஆதவ் அர்ஜுனாவுக்கு அரசியல் பிரிவு பொதுச்செயலாளர் என பதவிகளை கையில் கொடுத்தே அழைத்து வந்துள்ளார் விஜய். இதுமட்டுமல்லாமல் ராஜ்மோகனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது தவெக கட்சிக்கு பலமாக இருந்தாலும், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு தான் பெரிய அடியாக இருக்கும் என சொல்கின்றனர்.
தவெக கட்சி ஆரம்பித்ததில் இருந்தே ஒற்றை ஆளாக களத்தில் சுழன்று வருகிறார் புஸ்ஸி ஆனந்த். மாநாடு, பரந்தூர் விசிட் என அனைத்தையும் பக்காவாக ப்ளான் செய்து எந்த பிரச்னையும் இல்லாமல் நடத்தி முடித்தார். சில சமயங்களில் விஜய்யை விட புஸ்ஸி ஆனந்த் தான் தவெகவின் முகமாக இருக்கிறாரா என விமர்சிக்கப்படும் அளவுக்கெல்லாம் சென்றது. விஜய்யை ஓரங்கட்டிவிட்டு, புஸ்ஸி ஆனந்த் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்கிறார் என ஜான் ஆரோக்கியசாமி பேசியதாக வெளியான ஆடியோவால் கட்சிக்குள்ளும் பூகம்பம் கிளபியது.
ஆனால் தற்போது கட்சியில் இணைந்துள்ள 2 பேருக்கும் பொதுச்செயலாளருக்கு அடுத்து இருக்க கூடிய முக்கியமான பொறுப்புகளே கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் ஆதவ் அர்ஜூனாவுக்கு ஆனந்தின் பதவிக்கு மிகவும் நெருக்கமாக இருக்கக் கூடிய பதவியே கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் புஸ்ஸி ஆனந்த் ஓரங்கட்டப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பேச்சு இருக்கிறது.
ஏற்கனவே ஆதவ் அர்ஜூனா கட்சியில் இணைத்துக்கொள்ளப்பட்டால் தன்னுடைய செல்வாக்கு சரிந்துவிடும் என்பதால் அவரை கட்சியில் இணைத்துக்கொள்ள கூடாது என்று புஸ்ஸி ஆனந்த் பிடிவாதமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. விசிகவிலேயே திருமாவளவனுக்கு அடுத்து நம்பர் 2ஆக முயற்சித்த ஆதவ் அர்ஜூனாவை அந்த கட்சியின் நிர்வாகிகள் கண்டறிந்து, அவரது செயல்பாடுகள் குறித்து திருமாவளவனிடம் புலம்பினர். அதேநிலையே தவெகவிலும் தனக்கு வந்துவிடுமோ என்ற பயம் புஸ்ஸி ஆனந்துக்கு வந்துள்ளதாக தெரிகிறது. அதனால் ஆரம்பத்தில் இருந்தே அவரை கட்சிக்குள் வர விடாமல் எவ்வளவோ முயற்சி செய்தும் கடைசியில் அது கைக்கொடுக்கவில்லை. 2026 தேர்தலை குறிவைத்து ஆட்டத்தை ஆரம்பித்துள்ள விஜய், இவர்களை கட்சிக்குள் கொண்டு வந்தே ஆக வேண்டும் என கறார் காட்டியுள்ளார். ஆனந்த் களத்தில் ஆக்டிவாக இருந்தாலும், திமுகவை டார்கெட் செய்து ஆதவ் நடத்தும் அரசியல் தவெகவுக்கு பிளசாக இருக்கும் என்பதால் இந்த முடிவுக்கு வந்துள்ளார் விஜய்